Ad Widget

கமலேஷ் சர்மாவிடம் இராணுவ தலையீடு குறித்து சிவில் சமூகத்தினர் சுட்டிக்காட்டு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவிடம் யுத்தம் முடிந்து 5 வருடங்களை கடந்துள்ள நிலையிலும் வடக்கில் இராணுவ பிரசன்னம், இராணுவ தலையீடு மற்றும் பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு போன்ற பல்வேறு விடயங்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

5நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா இன்று வடக்கிற்கான விஜயம் மேற்கொண்டு காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். முதலாவதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து மதியம் 12.30 மணிக்கு வடக்கின் சிவில் சமூக பிரதிநிதிகள் சிலரைச் சந்தித்து கலந்துரைடாடினார்.

குறித்த கலந்துரையாடல் இரகசியமாக ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இதன்போது பாதிரியார்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என சிலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் வடக்கின் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதன்படி வடக்கில் பணி புரியும் சிவில் பிரதிநிதிகள் பணியைச் செய்வதில் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் பொதுநலவாய அமைப்பின் செயலர் கேட்டறிந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், கலந்து கொண்டவர்கள் அனைவரும் தங்களுடைய துறை சார் பணிகளை சீராக மேற்கொள்வதற்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் , சுதந்திரமில்லாத தன்மை போன்ற பல காரணங்களை செயலரிடம் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் யுத்தம் முடிந்து 5 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக செயலரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர். மேலும் இராணுவத்தினரின் தலையீடு, பொதுமக்களுடைய காணிகளை இராணுத் தேவைக்காக சுவீகரித்தல் சம்பவங்கள், மீள்குடியேற்றம் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அரசினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் அபிவிருத்தி என்பது வெளியில் காட்டக் கூடிய வகையிலான அபிவிருத்தி மட்டுமே செய்யப்படுகின்றது. ஆனால் வடக்கு அபிவிருத்தியானது மக்களுக்கு எந்தளவிற்கு சென்றடைகின்றது என்பது கேள்விக்குறி என்றும் கமலேஷ் சர்மாவிடம் எடுத்து விளக்கியுள்ளனர்.

எனவே இவ்வாறான விடயங்கள் குறித்து கவனம் எடுப்பதாக செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்திருந்ததாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்ட சிவில் பிரதிநிதிகள் சமூகத்தில் ஆற்றிவரும் பங்களிப்பும் அதனை நடைமுறைப் படுத்துவதில் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பிலும் தற்போதைய அரசியல் மற்றும் அபிவிருத்தி நிலவரம் குறித்தே அறிந்து செல்லும் நோக்குடன் செயலரின் விஜயம் அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சிவில் சமூகத்தினர் பலருக்கு குறித்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் அழைக்கப்பட்ட சிலர் கலந்துரையாடலில் பங்கு கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த சந்திப்பு இரகசிய சந்திப்பு என்பதால் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தமையும் சந்திப்பு தொடர்பான விடயங்கள் மறைப்பு செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts