கடும் வறட்சி, அளவுக்கதிகமான வெப்பநிலை வீச்சால் குடாநாட்டின் கிணறுகளின் நீர்மட்டம் அளவுக்கு அதிகமாக குறைந்து வருவதோடு குளங்கள் வற்றி வறட்சியடைந்து வருகின்றன. கால்நடைகள் குடிக்கத் தண்ணீர் தேடி அலைவதோடு வறட்சி காலத்தில் ஏற்படும் விலங்கு விசர்நோய் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சூரியன் யாழ்ப்பாணத்துக்கு மேல் நேரில் உச்சம் கொடுப்பதால் வெப்பநிலை அதிகரித்திருப்பதோடு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் மழை இல்லாமல் இருப்பதால் கிணறுகளின் நீர்மட்டம் அளவுக்கு அதிகமாக கீழ் இறங்கி உள்ளது. அத்துடன் குளங்கள் நீர் வற்றிக் காணப்படுவதால் மேய்ச்சல் ஆடு, மாடுகள் தண்ணீருக்கு அலைகின்றன.
கிணறுகளின் நீர்மட்டம் குறைந்திருப்பதோடு ஊற்றின் அளவும் குறைவடைவதால் விவசாயிகள் செய்கை பண்ணிய பயிர்களுக்கு உரிய முறையில் நீர்பாய்ச்ச முடியாதநிலை ஏற்பட்டிருப்பதோடு நீர் இறைப்பதற்குப் பயன்படுத்தும் கிணறுகள் மீள்நிரம்புவதற்கும் நீண்டநேரம் செல்கின்றன. இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் பயிர்ச் செய்கைக்குப் பயன்படுத்தும் பங்குக் கிணறுகளில் இருந்து நீர்பாய்ச் சுவதில் எதிர்பாராத நெருக்கடி நிலையை எதிர்கொள்ள வேண்டிஇருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அளவுக்கதிகமான வெப்பநிலை வீச்சு காணப்படுவதால் வெப்பநிலையால் ஏற்படக் கூடிய விலங்கு விசர்நோய் ஏற்படும் ஏதுநிலை காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. அத்துடன் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்களைப் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்கும் தொற்று நோய்கள் பரவத் தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.