கடும் வறட்சி: தற்காலிகமாக மூடப்படுகிறது யால தேசிய பூங்கா!!

நாட்டில் நிலவி வரும் கடுமையான வறட்சியான வானிலையைக் கருத்திற்கொண்டு, யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2 ஆம் பிரிவுகள் இன்று (14) திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2 ஆம் பிரிவுகளை தற்காலிக மூடுவதற்கான நடவடிக்கை அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வரை ஒரு மாத காலத்திற்கு அமுலில் இருக்கும்.

யால தேசிய பூங்காவானது 44 வகையான பாலூட்டிகள், 215 வகையான பறவைகள், 47 வகையான ஊர்வன மற்றும் 21 வகையான மீன் இனங்களின் இருப்பிடமாகும்.

வழக்கமாக ஆகஸ்ட் முதல் மார்ச் வரையிலான காலத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். எனினும், தற்போதைய ‘எல் நினோ’ தீவிர நிலையின் காரணமாக நிலவும் கடும் வெப்பத்தால் நீர்நிலைகள் வற்றி, குடிநீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை கடுமையாக ஏற்பட்டுள்ளது.

உணவையும் நீரையும் தேடி வனவிலங்குகள் இடம்பெயரும் போது சுற்றுலாப் பயணிகளால் ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

மாணிக்க ஆறு 04 வெவ்வேறு புள்ளிகளில் இருந்து சூரியசக்தி பம்புகள் மூலம் பெறப்படும் நீர், நிலத்தடி குழாய்கள் வழியாகப் பூங்காவிலுள்ள குளங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

வனவிலங்கு அதிகாரிகளால் நாளாந்தம் சுமார் 200,000 லிற்றர் நீர் போசரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, இயற்கை மற்றும் செயற்கைக் குளங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts