Ad Widget

கடும் வறட்சி காரணமாக 3 இலட்சம் குடும்பங்கள் பாதிப்பு

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நிலவிவரும் கடுமையான வறட்சியினால் சுமார் 3 இலட்சம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 9 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், வடக்கில் சுமார் 4 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 33 ஆயிரத்து 359 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதிகளை பெற்றுகொடுக்கும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் நிலவும் வறட்சியினால் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு உட்பட்ட நீர்த்தேக்கங்களில் 38 சதவீதமான நீரே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அக்கினி நட்சத்திரம் நாளை முதல் ஆரம்பமாகி எதிர்வரும் 28ஆம் திகதிவரை நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்பநிலை காரணமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, கொழும்பு, கம்பஹா, அம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts