கடும் மழை பெய்வதற்கான சாத்தியம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேநேரம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது குறிப்பிட்ட மட்டத்துக்கு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைப் பிரதேசங்களிலும் ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு, புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை காணப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts