Ad Widget

கடும் நிபந்தனைகளுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் அனுமதி!

சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று மாலை அனுஷ்டிக்கப்படவிருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை, கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களை நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களது பெயர்கள் காணப்படக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் குறித்த நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) மாலை திட்டமிட்டவாறு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களின் நினைவாக செதுக்கப்பட்ட சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் முல்லைத்தீவு பேதுறு தேவாலய வளாகத்தில் நிறுவி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த கல்வெட்டுக்களில் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெயர்களும் உள்ளடங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், நீதிமன்றத்தின் ஊடாக முல்லைத்தீவு பொலிஸார் நேற்றிரவு இடைக்கால தடையுத்தரவை பெற்றிருந்தனர்.

குறித்த தடையானது பக்கச்சார்பானதென்றும், தடையை நீக்கி நினைவேந்தலுக்கு அனுமதி வழங்குமாறும் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனால் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனு விசாரணையின் போது, மனுதாரரின் வாதங்களை ஆராய்ந்த நீதிமன்றம் நினைவேந்தலுக்கான அனுமதியை வழங்கியுள்ளது.

சட்டத்தரணி தமது வாதத்தின் போது, இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் சமய நிகழ்வுகளை நடத்துவதும், கூட்டங்களை நடத்துவதும், நினைவுகூரலை மேற்கொள்வதும் மக்களின் உரிமைகளாக இருக்கின்ற நிலையில், பொலிஸாரின் சந்தேகத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு இந்நிகழ்விற்கு தடை ஏற்படுத்தியிருக்கக் கூடாதென சுட்டிக்காட்டினார்.

தேசிய பாதுகாப்பு, ஒருமைப்பாடு என்பவற்றை சுட்டிக்காட்டி இந் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு மத வழிபாட்டு தலத்தின் வளாகத்தில் நடைபெறும் நிகழ்வானது தேசிய பாதுகாப்பிற்கோ ஒருமைப்பாட்டிற்கோ எந்த விதத்திலும் பாதிப்பாக அமையாதெனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, இறந்தவர்களை தங்குதடையின்றி நினைவுகூருவதானது, நல்லிணக்கத்தை ஏற்படுத்த இன்றியமையாததென தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், அரசின் நிலைமாறுகால நீதிச் செயன்முறையிலும் இவ்விடயம் முக்கிய பங்கை வகிக்கின்றது. அந்தவகையில் இந்த நினைவுகூரலுக்கு தடை விதித்தமை எந்த வகையிலும் நியாயமில்லையென சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் இந்த நிகழ்வு எந்த விதத்திலும் குந்தகமாக அமையாதென்ற வாதத்தை துரதிஷ்டவசமாக நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக தாம் மேல் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் சட்டத்தரணி குருபரன் தெரிவித்துள்ளார்.

Related Posts