Ad Widget

கடன் நிலுவை செலுத்ததால் பணம் மீள எடுக்க மறுத்த அரச வங்கி!!

வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தனிநபர் கடன் தவணைக் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தைக் காண்பித்து வைப்பிலிட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு வங்கி முகாமையாளர் மறுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் இலங்கை வங்கியின் வட்டுக்கோட்டை கிளையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட தாயார் தெரிவித்தார்.

ஒரு மில்லியன் ரூபாவுக்கு உள்பட்ட வங்கிக் கடன் நிலுவைகள் அறவீட்டை 3 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறு வங்கிகளின் தலைவருக்கு பணித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ள நிலையில் இந்தச் செயலை இலங்கை வங்கியின் வட்டுக்கோட்டை கிளை முகாமையாளர் செய்துள்ளார்.

வட்டுக்கோட்டை (J/160) அராலி மேற்கைச் சேர்ந்த மயூரன் நிசாந்தினி என்பவரே வங்கி முகாமையாளரின் செயற்பாட்டால் தான் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

“இன்றைய தினம் இலங்கை வங்கி வட்டுக்கோட்டை கிளையில் உறவினர் ஒருவர் அனுப்பிய 2 ஆயிரம் ரூபாய் பணத்தை மீளப்பெறுவதற்கு சென்றிருந்தேன்.

கடந்த ஆண்டு அந்தக் கிளையில் ஒரு லட்சம் ரூபாய் சுயதொழில் கடனைப் பெற்றிருந்தேன்.

கடன் தொகையினை காலம் தவறாது கடந்த மாதம் வரையிலும் சரியாக மீள செலுத்தி வந்துள்ளேன்.

இந்த மாதம் வீட்டு வறுமை காரணமாக உறவினர் வழங்கிய 2 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெறுவதற்கு வங்கிக்கு சென்ற போது அதனை வழங்க மறுத்தனர்” என்று பாதிக்கப்பட்ட தாயார் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி கரிசனை கொள்ளவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Related Posts