Ad Widget

கடந்த காலத்திற்கு செல்ல அரசாங்கம் அழைப்பு விடுக்கின்றதா?: மனோ கணேசன்

வரலாற்றில் இருந்து பாடம் படிக்காத இலங்கை அரசாங்கம், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மூலம் மீண்டும் கடந்த காலத்திற்கு அழைப்பு விடுக்கின்றதா என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.வடக்கில் நடைபெற்றுள்ள வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண பல்கலைக்கழக விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீதான தாக்குதல், மாணவர்களின் கண்டன ஊர்வலம் மீதான தாக்குதல், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனின் வாகனம் மீதான தாக்குதல், ஊடகவியாளர் தேவநாயகம் பிரேம்நாத் மீதான தாக்குதல், பிரதேசசபை தலைவரின் வீடு எரிக்கப்பட்டமை ஆகிய தொடர்ச்சியான வன்முறைகள், வட மாகாணத்தில் 1980ம் வருடங்களில் நடைபெற்ற சம்பவங்களை நினைவூட்டி, இன்று வடக்கில் இலங்கை இராணுவத்தின் ஆட்சி நடப்பதை படம் பிடித்து காட்டுகின்றன.

“வரலாற்றில் இருந்து பாடம் படிக்காத இலங்கை அரசாங்கம் மீண்டும், கடந்த காலத்துக்கு செல்வதற்கு தமிழ் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றதா? அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கிய ரோகன விஜேவீர 1989ம் வருடம் இராணுவத்தால் கொல்லப்பட்ட நவம்பர் 13, ஒவ்வொரு வருடமும் தமது போராளிகளின் நினைவு தினமாக அனுசரிப்பதற்கு ஜேவிபியினருக்கு தென்னிலங்கையில் இருக்கின்ற உரிமை ஏன் தமிழ் இளைஞர்களுக்கு வடக்கில் இல்லை?”

கடந்த காலத்தை நோக்கி தமிழ் இளைஞர்களை இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு அழைத்து செல்கிறதா என்ற கேள்வி தமிழ் மக்கள் மனங்களில் இன்று எழுந்துள்ளது. இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச மன்றத்தில் பிணை வழங்கி காப்பாற்றி வரும் இந்தியா, அமெரிக்கா அரசாங்கங்களும், ஐக்கிய நாடுகள் சபையும், இவற்றுக்கு உரிய பதில்களை பெற்று தர வேண்டும்.
இராணுவம், மாணவர் விடுதிகளுக்கு உள்ளே சென்றதும், அதையடுத்து மாணவர்களின் எதிர்ப்பு ஊர்வலத்தின்மீது தாக்குதல் நடத்தியதும் அத்துமீறிய செயல்களாகும். அதேபோல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் தாக்கப்பட்டமை அடாவடித்தனமானது.

தென் இலங்கையில், போராளிகளை நினைவு கூறுவதற்கும், ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு ஊர்வலம் நடத்துவதற்கும், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் அனுமதிகள் வாங்க வேண்டியதுகூட இல்லை. வீதிகளைமூடி, கடைகளை மூடி, விளக்குகளை கொளுத்தி, பெரும் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும், இன்று கொழும்பிலும், தென் இலங்கையிலும் தினசரி நடக்கின்றன.

இவை ஏன் வடக்கில் நடைபெற முடியாது? இந்த நாட்டில் தமிழர்களுக்கு, சிங்களவர்களுக்கு என இரண்டு சட்டங்கள் இருக்கின்றனவா? வட மாகாணத்தில் தமிழ் இளைஞர்களை மீண்டும் தனித்து போராட்ட களத்துக்கு அனுப்பி அழிக்க நினைக்கும் முயற்சிகளை தமிழ் மக்கள் இனம் கண்டுகொள்ள வேண்டும்.

கடந்தகாலங்களை விட இன்று உலகம் இலங்கை தமிழர் இன்னல்களை அறிந்துள்ளது. இன்று உலகின் எரியும் பிரச்சினைகளில் ஒன்றாக ஐநா சபை வரை நமது பிரச்சினை நீண்டுள்ளது. எனவே, இனியும் நமது இளைஞர்களும், மாணவர்களும் மாத்திரம் தனித்து நின்று போராட வேண்டியதில்லை.

இளைஞர்களை போராட தூண்டிவிட்டு அழிக்கும் அரசாங்கத்தின் இந்த நோக்கத்தை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். யுத்தம் முடிந்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியும் எந்த வித தீர்வுகளையும் கண்ணில் காட்டாதது மாத்திரம் அல்ல, இருப்பதையும் பறித்து கொள்ளும் அரசாங்கத்தின் கபட நோக்கங்களுக்கு எதிராக ஒட்டு மொத்த தமிழ் இனமும் ஜனநாயகரீதியாக போராடவேண்டும்.

மாணவர்களையும், இளைஞர்களையும் மாத்திரம் போராட அனுப்பிவிட்டு, காத்திருக்காமல் தலைவர்களுடன் கரம் கோர்த்து அனைத்து தரப்பு தமிழ் மக்களும் சாத்வீக ரீதியாக அணிதிரள்வதன் மூலமாகவே ஒரு இனமாக இந்நாட்டில் நாம் வாழ முடியும். அதற்கான வேளை இன்று வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

Related Posts