Ad Widget

கஞ்சா வைத்திருந்தவரின் பிணை நிராகரிப்பு! பிணை மனுவும் தள்ளுபடி!!

கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட பெருந்தொகையான கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தபோது இரண்டு வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணையில் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பிணை விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. அத்துடன் பிணை மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.

மாதகல் பகுதியைச் சேர்ந்த அன்ரனி ரொபின்தாஸ் என்பவர் கடந்த 19.06.2014 ஆம் திகதி 127 கிலோ 695 கிராம் எடையுடைய கேரள கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இவர் கடந்த 2 வருடங்களாக விளக்கமறியலில் இருந்து வருகின்றார்.

இவர் நீண்ட காலமாக விளக்கமறியலில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அவரை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி பிணை மனுவொன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில் கோரப்பட்டவாறு பிணை வழங்கக் கூடாது என அரச சட்டவாதி சக்கி இஸ்மாயில் நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்தார்.

இந்த மனு மீதான விசாரணையை மேற்கொண்ட யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், பிணை வழங்க மறுத்ததுடன், பிணை மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார்.

இந்த பிணை மனு மீதான கட்டளையில் அவர் தெரிவித்துள்ளதாவது:-

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டபோது, அவருடைய உடைமையில் 127 கிலோ 695 கிராம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது பெருந்தொகையான நிறையுடைய கஞ்சா சம்பந்தப்பட்ட வழக்காகும்.

கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்து குற்றச் செயல்களுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

அதேவேளை, கேரளாவில் இருந்து யாழ் குடாநாட்டுக்கு பெருமளவு கஞ்சா கடத்தி வரப்படுகின்ற சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. கேரள கஞ்சா கடத்தியமைக்காக பலர் கைது செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில் பெரும் தொகையான கஞ்சா உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள ஒருவருக்கு பிணை வழங்கினால், சமூக கட்டுப்பாட்டு நிலையைக் குழப்புவதாக அமைந்துவிடும்.

இரண்டு வருடங்களாக இவர் விளக்கமறியலில் இருந்து வருகின்றார் என்ற காரணத்திற்காக பிணை வழங்க முடியாது. பெருமளவு கஞ்சாவை இவர் உடைமையில் வைத்திருந்த காரணத்தினால், இவருடைய நலனிலும் பார்க்க சமூகத்தின் நலனே முக்கியமாகும். எனவே இவருக்கான பிணை மனுவை இந்த நீதிமன்றம் நிராரிக்கின்றது. அத்துடன் இந்தப் பிணை மனுவையும் இந்த நீதிமன்றம் முற்றாகத் தள்ளுபடி செய்கின்றது என நீதிபதி இளஞ்செழியன் தனது கட்டளையில் தெரிவித்துள்ளார்.

Related Posts