Ad Widget

கஜேந்திரகுமார் – புலனாய்வாளர்கள் முறுகல்! வெடித்தது புதிய சர்ச்சை

யாழ்ப்பாணம்-மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது பொலிஸாரின் கடைமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மக்கள் சந்திப்பு இடம்பெற்ற இடத்தை அண்மித்து சாதாரண தர பரீட்சை மத்திய நிலையம் அமைந்திருந்த நிலையில் மக்கள் சந்திப்பை நடத்த வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்திய நிலையிலேயே வாக்குவாதம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் மக்கள் சந்திப்பை அனுமதியற்ற நிலையில் பரீட்சை நிலையத்திற்கு அருகாமையில் ஏற்பாடு செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரன் நேற்று(05.06.2023) கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படட போது, அவரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சட்டதரணி கந்தசாமி மகிந்தன் கருத்து தெரிவிக்கையில்,“குறித்த கூட்டத்தை அந்த பெண்மணி ஒழுங்கு செய்யவில்லை என்றும் ஏனைய பல விடயங்களையும் நான் இன்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தேன்.

பொலிஸாரால் கூறப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளை மறுத்துரைத்திருந்த போதிலும், பொலிஸார் பிழையாக நீதிமன்றை வழிநடத்தி அந்த பெண்மணியை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.”என கூறியுள்ளார்.

இதேவேளை நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்போது,“அரசாங்கம் தமது அராஜகத்தை மூடிமறைக்க இப்போது இந்த வழக்கை திசை திருப்பும் நோக்குடன் செயற்பட தொடங்கியுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை அதிகாலையில் கைது செய்து, அவசர அவசரமாக பொய்யான தகவல்களுடன் நீதிமன்றில் நிறுத்தி தடுப்பு காவலில் வைக்கும் முயற்சியை செய்தனர்.

அவர் எந்த ஒரு இடத்திலும் பொலிஸாருடன் முரண்படவில்லை என்பதற்கு அங்கிருந்த இளைஞர்கள் சாட்சியாக உள்ளனர்.

பொலிஸாரின் இந்த செயலை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். இதை ஒட்டுமொத்த ஜனநாயக்கத்திற்கும் விடுக்கின்ற அச்சுறுத்தலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.”என கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறுகையில், புலனாய்வு பிரிவினர் மக்கள் சந்திப்பு நடைபெற்ற இடத்திற்கு சென்ற போது, அவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறியுள்ளனர்.

அடையாள அட்டையை காண்பித்த போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் புலனாய்வு பிரிவினரை தடுத்து வைக்க முயற்சித்த போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

பொலிஸாரின் கடமைக்கு பலாத்காரமாக இடையூறு விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சரியாக அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கபட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஏனையவர்களுக்கும் எதிராக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அந்த பகுதிக்கு வருவதாக அந்த பகுதியினுடைய பொலிஸ் அதிகாரிக்கும் தெளிவுபடுத்தி இருக்கவில்லை.

மேலும் பாதுகாப்பு தரப்பினரும் அந்த பகுதிக்கு வருகை தரவில்லை. அங்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது பொலிஸாரின் கடமையாகும்.”என தெரிவித்துள்ளார்.

Related Posts