Ad Widget

ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த காணியில் கால்பதித்தனர் உரிமையாளர்கள்

கடந்த 20 வருடங்களாக வடக்கிற்கும் தெற்கிற்கும் செல்லும் பயணிகள் மற்றும் வாகனங்களை சோதனையிடும் பலமான சோதனைச்சாவடியாக காணப்பட்ட வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்திருந்த காணியை, அதன் உரிமையாளர்கள் இன்று (திங்கட்கிழமை) அடையாளப்படுத்தினர்.

18 குடும்பங்களுக்குரிய 41 ஏக்கர் காணியை அபகரித்து இச் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மஹிந்த ஆட்சிக்காலத்தில் இக்காணிகளை சுவீகரிப்பதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.

எனினும் இதனை எதிர்த்து காணி உரிமையாளர்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், அண்மையில் குறித்த காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு ராணுவம் உடன்பட்டது. அதனைத் தொடர்ந்து குறித்த காணியை வவுனியா அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கொண்ட குழு பொறுப்பேற்றிருந்தது.

இந் நிலையில் இன்று காணியின் உரிமையாளர்களான 18 குடும்பத்தினருக்கும் தமது காணிகளை பார்வையிடுவதற்கும் அடையாளப்படுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த இரு தசாப்த காலத்திற்கு பின்னர் தமது சொந்த நிலத்தில் கால்பதித்த மக்கள், தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு தமக்கான அடிப்படை வசதிகள் மற்றும் வீட்டுத்திட்டத்தையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணி அடையாளப்படுத்தும் நடவடிக்கையின்போது, வவுனியா பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் மற்றும் நில அளவையாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர். காணிகள் முழுமையாக அடையாளப்படுத்தப்பட்ட பின்னர், அவற்றை அளவீடு செய்யும் நடவடிக்கை இடம்பெறும்.

Related Posts