ஓமந்தைச் சோதனைச்சாவடி முழுமையாக அகற்றப்படமாட்டாது!

வவுனியா-ஓமந்தை இராணுவ முகாம் மற்றும் ஓமந்தைச் சோதனைச் சாவடி அமைந்திருந்த காணிகளை விட்டு நேற்று சிறீலங்கா இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

அப்பகுதியில் கடந்த 25ஆண்டுகளாக இருந்த இராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடி அமைந்திருந்த காணிகள் நேற்று வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

ஓமந்தையில் 1992ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இராணுவமுகாமே 2002ஆம் ஆண்டு வடக்கிலிருந்து தெற்குநோக்கிப் பயணிக்கும் மக்களின் சோதனைச் சாவடியாக மாற்றப்பட்டது.

இருப்பினும் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் குறித்த சோதனைச்சாவடி அகற்றப்பட்டது. இந்தப் பகுதியில் மக்களின் காணிகளில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் முற்றுமுழுதாக வெளியேறியுள்ளனர்.

மொத்தம் 19 ஏக்கர் காணிகளில் 16 ஏக்கர் காணிகளை நேற்று வவுனியா அரச அதிபரிடம் சிறிலங்கா இராணுவத்தினர் கையளித்துள்ளனர். எஞ்சிய 3 ஏக்கர் காணிகள் விரைவில் கையளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட இந்தக் காணிகள் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், ஓமந்தையில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடி முழுமையாக அகற்றப்படமாட்டாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் றொசன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

மேற்குப் பகுதியில் உள்ள காணிகளை மாத்திரமே இராணுவத்தினர் கையளிப்பர். நெடுஞ்சாலையின் மறுபக்கத்தில் சிறீலங்கா இராணுவத்தினர் தொடர்ந்து நிலைகொண்டிருப்பர்.

காணிகளை விடுவிக்கும் இம்முடிவு சடுதியாக எடுக்கப்பட்டதல்ல எனவும், இது தனியார் காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேறும் நடவடிக்கையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts