Ad Widget

ஒரே நாளில் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்த தென்ஆப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி ஏராளமான சாதனைகளை படைத்தது.

225308

அதன் விவரம் வருமாறு:-

* 45 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரே இன்னிங்சில் மூன்று வீரர்கள் சதம் அடிப்பது இது 2-வது முறையாகும். அரிய நிகழ்வுகளில் ஒன்றான இத்தகைய அளப்பரிய சாதனையை இதற்கு முன்பும் தென்ஆப்பிரிக்கா தான் செய்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர்களில் அம்லா (153 ரன்), ரோசவ் (128 ரன்), டிவில்லியர்ஸ் (149 ரன்) செஞ்சுரி அடித்திருந்தனர்.

* ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் 400 ரன்களுக்கு மேல் குவிக்கப்படுவது இது 6-வது முறையாகும்.

* ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 17 முறை 400 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளன. இதில் அதிக முறை 400 ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற பெருமையை தென்ஆப்பிரிக்கா தட்டிச்சென்றுள்ளது. நேற்றைய ஆட்டத்தையும் சேர்த்து தென்ஆப்பிரிக்கா 6 முறை 400 ரன்களை தாண்டியுள்ளது. இந்திய அணி 5 முறை 400 ரன்களை கடந்திருக்கிறது.

* தென்ஆப்பிரிக்கா மலைக்க வைத்த 438 ரன்களே, மும்பை வான்கடே மைதானத்தில் மட்டுமல்ல, இந்திய மண்ணிலும் ஒரு அணியின் அதிகபட்சமாக பதிவாகியிருக்கிறது. இந்த மைதானத்தில் இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு உலக கோப்பையின் போது கனடாவுக்கு எதிராக நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 358 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

* தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்சுக்கு இது 23-வது செஞ்சுரியாகும். இதன் மூலம் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலியுடன் 5-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

* தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் 32 வயதான ஹஷிம் அம்லா நேற்று 15 ரன்கள் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை தொட்டார். இதன் மூலம் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார். 126 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று அதில் களம் இறங்கிய 123-வது இன்னிங்சிலேயே இந்த மைல்கல்லை அம்லா கடந்துள்ளார். இதற்கு முன்பு இந்தியாவின் விராட் கோலி கடந்த ஆண்டு தனது 136-வது இன்னிங்சில் 6 ஆயிரம் ரன்களை எட்டியதே இந்த வகையில் உலக சாதனையாக இருந்தது. அதனை அம்லா தகர்த்துள்ளார்.

* தென்ஆப்பிரிக்கா மயிரிழையில் சாதனை ஒன்றை நழுவவிட்டது. 2006-ம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 443 ரன்கள் சேர்த்ததே இந்த நாள் வரை ஒரு நாள் போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ரன்களாக இருக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் கடைசி 3 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் உலக சாதனை என்ற நிலைமையில், தென்ஆப்பிரிக்கா கடைசி 3 பந்துகளில் 4 ரன் மட்டுமே எடுத்தது.

* தென்ஆப்பிரிக்கா தனது இன்னிங்சில் மொத்தம் 20 சிக்சர்கள் விளாசியது. ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த 2-வது அணி என்ற சிறப்பை தென்ஆப்பிரிக்கா பெற்றது. 2014-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நியூசிலாந்து 22 சிக்சர்கள் எடுத்ததே அதிகபட்சமாக நீடிக்கிறது.

* குயின்டான் டி காக் இந்தியாவுக்கு எதிராக 9 இன்னிங்சில் 5 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் குறைந்த இன்னிங்சில் ஒரு அணிக்கு எதிராக 5 சதங்கள் அடித்தவர் என்ற சாதனை அவர் வசம் ஆனது. பாகிஸ்தானின் சல்மான்பட் இதே இந்தியாவுக்கு எதிராக 18 இன்னிங்சில் 5 சதங்கள் எடுத்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

* 2002-ம் ஆண்டில், பாகிஸ்தானின் அப்ரிடி ஒரு நாள் போட்டியில் 48 சிக்சர்கள் துவம்சம் செய்ததே ஒரு ஆண்டில் வீரர் ஒருவரின் அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையாக இருந்தது. அந்த நீண்ட கால சாதனைக்கு டிவில்லியர்ஸ் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். டிவில்லியர்ஸ் இந்த ஆண்டில் மட்டும் 58 சிக்சர்கள் (20 ஆட்டம்) அடித்திருக்கிறார். இதில் நடப்பு தொடரில் எடுத்த 20 சிக்சர்களும் அடங்கும்.

Related Posts