Ad Widget

ஐ.ஸ். தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுறுவியுள்ளதாக தகவல்!

இந்தியாவின் கேரளாவை சேர்ந்த 17 பேர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாகவும் இவர்கள் இலங்கை மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் இலங்கைக்கு அறிவிக்கும் பட்சத்தில் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் இது தொடர்பில் இந்திய பாதுகாப்பு தரப்பு எந்தவித தகவல்களையும் இலங்கை பாதுகாப்பு அமைச்சிற்கு தெரிவிக்கவில்லை. அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் இலங்கை பாதுகாப்பு பிரிவு விசாரணைகளை மேற்கொள்ளும் என இலங்கை பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் கேரளாவைச் 17 பேர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக இந்தியாவின் பிரபல ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தவர்களின் ஒருவர் தன்னுடய மனைவிக்கு அனுப்பிய வாட்ஸ் அப் குறுந்தகவல் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என அவ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது. கேரள மாநிலத்தின் காசர்கோடு மற்றும் பாலக்காட்டை சேர்ந்த 16 பேர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காணமல்போயுள்ளனர்.

இவர்களில் 4 பெண்களும் 2 குழந்தைகளும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இலங்கை மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளதாகவும் அதன் பின்னர் கடந்த ஒரு மாதமாகியும் இவர்களை பற்றிய எந்த தகவலும் வரவில்லை எனவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் காணாமல் போன ஹபீசுதீன் என்பவரின் மனைவியின் கையடக்கத் தொலைபேசிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வாட்ஸ்அப் குறுந்தகவல் ஒன்று வந்தது. நாங்கள் இஸ்லாமிய நாட்டிற்கு வந்து விட்டோம். இங்கு நிரபராதிகளை அமெரிக்கா கொன்று குவிக்கிறது. எனவே அவர்களை பழிவாங்குவதற்காக ஐஎஸ் அமைப்புக்காக நாங்கள் எங்களை அர்ப்பணித்து விட்டோம். இனிமேல் எங்களை தேட வேண்டாம் என தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே இது குறித்து குறித்த குடும்பத்தின் நபர்கள் கேரள முதல்வர் பினராய் விஜயனிடம்முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து உடனடியாக விசாரணை நடத்த கேரள பொலிஸாருக்கு முதல்வர் உத்தரவிட்டதாகவும் உளவுத்துறை பொலிசார் நடத்திய விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளன என அவ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் பாதுகாப்பு ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவிக்கையில்.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பில் இந்திய பாதுகாப்பு தரப்பினர் எமக்கு எந்தவித உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடவில்லை.

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இலங்கையில் அவ்வாறு எதுவும் அடையாளம் காணப்படவில்லை. எவ்வாறு இருப்பினும் எமக்கு தகவல் கிடைக்கும் பட்சத்தில் நாம் இந்த விடயம் தொடர்பில் இந்திய பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம். அது தவிர்ந்து எமது பாதுகாப்பு நடவடிக்களை பலமாகவே உள்ளது என்றார்.

Related Posts