Ad Widget

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் கருத்துக்கு பான் கீ முன் ஆதரவு!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைனின் இலங்கை தொடர்பிலான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார்.

ban-keen-moon

இலங்கை குறித்த ஐ.நா விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைனுக்கும் – இலங்கை அரசுக்கும் இடையில் கடும் வார்த்தைப் பிரயோகங்களுடன் கூடிய அறிக்கைப் போர் இடம்பெற்றிருந்த நிலையிலேயே ஐ.நா செயலாளர் நாயகத்தின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசு ஐ.நா. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்துக்கு ஐ.நா.செயலாளர் நாயகம் முழுமையாக ஆதரவு தெரிவிக்கின்றார் எனவும் இதனையே செயலாளர் நாயகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார் எனவும் பாக் கீ மூனின் பேச்சாளர் பர்கான் ஹக் தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்த ஐ.நா விசாரணைகளின் நம்பகத்தன்மை தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியிருந்ததை அடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் சையத், கடும் வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி இலங்கையை கடுமையாக சாடியிருந்ததுடன், ஐ.நா விசாரணைகளை இலங்கை குழப்பிவிடும் சதியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

அதேவேளை ஐ.நா விசாரணைகளுக்கு சாட்சியமளிக்க முன்வருபவர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலும் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாகவும் சாடியிருந்தார். இதற்கு ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க ஊடாக பதிலளித்திருந்த இலங்கை அரசும், பதிலுக்கு கடும் வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தியிருந்ததுடன், இறமையுள்ள ஒரு நாட்டின் மீது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பொருத்தமற்ற வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு குற்றஞ்சாட்டுகிறார் எனவும் கண்டனம் வெளியிட்டிருந்தது.

Related Posts