Ad Widget

ஐ.நா. பிரேரணையை அமுல்படுத்துவதில் அமெரிக்கா உறுதி! – சம்பந்தன்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா.வுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இவ்வருடத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகராக கடமையாற்றி வந்த அதுல் கெஷாப், தனது பதவிக்காலம் நிறைவடைந்து செல்லவுள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை இன்று (வியாழக்கிழமை) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியதோடு, புதிய உயர்ஸ்தானிகரையும் அறிமுகப்படுத்தினார்.

குறித்த சந்திப்பைத் தொடர்ந்து தனியார் செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த போதே சம்பந்தன் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான அமெரிக்கா மிகுந்த கரிசனையுடன் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்ட சம்பந்தன், சகல விடயங்களையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றதெனவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தமிழர் பிரச்சினைகளை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றதில் அமெரிக்க உயர்ஸ்தானிகரின் பங்கு அளப்பரியதென்றும் சம்பந்தன் குறிப்பிட்டார். அதேபோன்று புதிய உயர்ஸ்தானிகரும் தமது கடமையைச் செய்வதற்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

Related Posts