Ad Widget

ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கைக்கான ஆதரவு தொடரும்: அமெரிக்கா உறுதி

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயாதீனமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை தொடர்ந்தும் ஆதரிக்க போவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

சிறுபான்மை தமிழ் சமூகத்தினருக்கான இந்த உறுதியை இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் றொபர்ட் ஹில்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பான வாக்குறுதியை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகித்துவந்த அமெரிக்கா, ஐ.நா. மனித உரிமைகள் சபையிலிருந்து விலகுவதாக கடந்த ஜுன் மாதம் அறிவித்தது.

அமெரிக்காவின் விலகலை தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை பொறுப்புக்கூறுவது தொடர்பான ஐ.நா. தீர்மானத்தின் நிறைவேற்றம் குறித்த சந்தேகம் எழுந்திருந்த நிலையிலேயே அமெரிக்காவின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய சர்வதேச விசாரணையை தமிழ் சமூகத்தினர் வலியுறுத்தி வந்த போதிலும், இலங்கை அரசாங்கத்திடமிருந்து அதற்கு வலுவான எதிர்ப்பு கிளம்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts