இலங்கை வந்துள்ள ஐ.நா. சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப், இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை எதிர்வரும் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் குறித்து இலங்கை கொண்டுள்ள முன்னேற்றங்களை ஆராயும் பொருட்டு ஐ.நாவின் உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள உருவாகாமல் உத்தரவாதப்படுத்தலுக்கான சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் நேற்றுமுன்தினம் கொழும்பை வந்தடைந்தார்.
ஆறு நாட்கள் இலங்கையில் தங்கவுள்ள இவர், அரச தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
இதன் ஓர் அங்கமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இவர் கொழும்பில் சந்திக்கவுள்ளார். இவருடனான சந்திப்பின்போது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசின் பொறுப்புக்கூறல் கடப்பாட்டை வலியுறுத்துவோம் என்றும், இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட்டு அது தொடர்ந்து நீடிக்கவேண்டுமெனில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசுக்கு ஐ.நா. அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் கோருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
அதேவேளை, வடக்கு, கிழக்கில் மீள் குடியேற்றம், இராணுவப் பிரசன்னம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல்போனோர் விவகாரம் தொடர்பிலும் இந்தச் சந்திப்பின்போது பேசுவோம் என்று சுரேஷ் எம்.பி. மேலும் தெரிவித்தார்.