Ad Widget

ஐ.நாவுக்கு எவ்வாறு பதிலளிப்பது! கூட்டமைப்பை நாடுகிறது அரசு!! பேச்சுகளும் நடந்தன என்கிறார் ரணில்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செப்ரெம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள சர்வதேச விசாரணை அறிக்கைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:-

“நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வே எமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இருந்தது. வேறு எந்தவித உடன்படிக்கைகளும் இல்லை. நல்லாட்சி தொடர கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கின்றேன். நல்லாட்சி ஏற்படுத்தப்பட்ட பின்னர் அதற்கும் சுதந்திரமாகச் செயற்பட முடியும். வடக்கு, கிழக்கில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் யுத்தம் தொடர்பில் ஜெனிவாவில் செப்ரெம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள அறிக்கைக்கு பதிலளிப்பது எவ்வாறு என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியுள்ளோம்.

ஐ.நா. அறிக்கை வந்த பின்னர் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் நாம் மனித உரிமைகள் பேரவைக்குப் பதிலளிக்க வேண்டும். அது தொடர்பான அறிக்கையை ஐ.நாவுக்கு சமர்பிக்கவேண்டும். அதை நாங்கள் கொண்டுசென்ற பின்னர் குற்றவாளிகளை மின்சாரக் கதிரைக்கு அனுப்ப சர்வதேச நீதிமன்றத்துக்கும் எப்படியும் முடியாது.

பெரும்பாலும் அதியுச்ச தண்டனையாக சிறைக்கே அனுப்பவே முடியும். நாம் உரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடவில்லை. அதனால், எமது நீதிமன்ற சட்ட கட்டமைப்புக்குள் தீர்வு காண்பதே எமக்குத் தேவையாக உள்ளது.

இந்த அறிக்கையைப் பார்த்த பின்னர் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் சர்வதேசத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சட்ட கட்டமைப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்க எதிர்பார்க்கின்றோம்” – என்றார்.

Related Posts