Ad Widget

ஐ.நாவின் புதிய நிலைப்பாட்டை வரவேற்கிறது கூட்டமைப்பு!

மனித உரிமைகள் கவுன்ஸிலின் 32ஆவது அமர்வின் போது, தீர்மானம் 30/1 இன் பிரகாரம் அளிக்கப்பட்ட முக்கியமான உறுதிப்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பாக காணப்படுகின்ற புதிய நிலை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் உயர் ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட வாய்மூல அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது.

எம்மைப் பொறுத்தமட்டில் அவரது வாய்மூல அறிக்கையிலே இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றிற்கான சந்தர்ப்பங்கள் மற்றும் சவால்கள் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விடயங்கள் பற்றி உயர்ஸ்தானிகரும் அவரது அலுவலகமும் தொடர்ச்சியாகக் காட்டிய ஈடுபாடு தொடர்பில் நாம் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையில் காணப்படுகின்ற பல பிரச்சினைகள் தொடர்பாக மிகவும் மெதுவான வேகத்தில் செயற்படுகின்றமை தொடர்பாகவும் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். முக்கியமாக இராணுவத்தினர் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றியுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதில் காணப்படும் தாமதம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றமையும் அதனை நீக்குவதற்கு அரசு தவறியுள்ளமை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள நபர்களை விடுவிப்பது தொடர்பாக வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றாமை மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பொதுமக்கள் தொடர்ச்சியாக கண்காணிப்புக்கு உட்படுத்தப்படல் மற்றும் அவர்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாதல் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

வடக்கு- கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் காணப்படும் தாமதம், அவர்களுக்கு வீடுகள், வாழ்வாதார வழிமுறைகள் மற்றும் ஏனைய வசதிகள் என்பவற்றைப் பெற்றுக்கொடுத்து அவர்களது அன்றாட வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டிலே தொடர்ந்தும் காட்டப்பட்டு வருகின்ற அசமந்தப் போக்குக் காரணமாக நல்லிணக்கச் செயற்பாடுகளும், இந்த நிலையிலிருந்து மக்கள் மீள்வதற்கான பணியும் பெரிதும் தடைப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நல்லிணக்கப் பொறிமுறையில், காணாமற்போனோருக்கான அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பது தொடர்பாக நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இச்சட்டமூலம் தொடர்பாக அரசாங்கமானது எமது கருத்துக்களையும் பெற்றுக் கொண்டதுடன், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தில் நாங்கள் முன்வைத்த பல திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் எமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

அச்சட்டமூலத்தை பயன் வாய்ந்த முறையில் சமர்ப்பித்திருப்பது தொடர்பாகவும் அரசாங்கத்திற்கு எமது நன்றியினைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். அதன் குழுநிலை மதிப்பீட்டின் போது மேலும் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கு நாங்கள் எதிர்பார்ப்பதுடன், அது விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எனவும் நம்புகிறோம்.

இச்சட்ட மூலத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்ற நோக்கம் நேர்மையான முறையில் நிறைவேற்றப்படுமாயின், உறுதியான பதிலை எதிர்பார்த்திருக்கின்ற பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டுள்ள நபர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கக் கூடியதாக இருக்கும். காணாமற்போனோருக்கான அலுவலகத்தினால், நம்பகத்தன்மையற்ற, தற்போதைய பரணகம ஆணைக்குழு உள்ளிட்ட வெற்றியளிக்காத ஆணைக் குழுக்களில் இருந்தும், இந்தக் காணாமற்போன நபர்கள் பற்றிய அலுவலகமானது முற்றிலும் மாறுபட்டதாக அமைதல் வேண்டும். அர்த்தமுள்ள நல்லிணக்கத்தின் நிமித்தம் இரு தரப்பினராலும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டுமென நாம் மீண்டும் மீண்டும் கூறியுள்ளோம்.

எமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய வகையில் தொழிற்பாட்டுப் பந்திகள் 6 மற்றும் 7 என்பன முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் தொடர்ச்சியா கவலியுறுத்தியுள்ளோம். முக்கியமாக, இலங்கை தமது பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டுமென தொடர்ந்தும் கூறிவந்த பலநாடுகள் எம்மை ஊக்குவித்துள்ளன. நாங்கள் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற தமிழ் மக்கள் உட்படஅனைத்துப் பிரஜைகள் சார்பாகவும் இலங்கைக்குள்ள மனப்பூர்வமான பொறுப்புக்கள் பற்றிதீர்மானம் 30/1 இல் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதனை காட்டாயமாக நிறைவேற்றுதல் வேண்டும்.

அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் பயனளிக்கக் கூடியவகையில் புதிய அரசமைப்புச் சட்டமொன்றினை தயாரிக்கவேண்டியதன் அவசியம் பற்றியும், அந்நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக பல நாடுகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளமை தொடர்பாகவும் இது தொடர்பில் உயர்ஸ்தானிகர் அவர்களின் அவதானிப்புக்களை குறித்தும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். உண்மையான மற்றும் பயன்வாய்ந்த நல்லிணக்கச் செயற்பாடுகளுக்காகவும், இலங்கையின் அனைத்து இன மக்களுக்கும் சமத்துவமும், நிலையான சமாதானமும் கிட்டக் கூடியவகையில் நீதியை நிலைநாட்டுவதற்கு ஏற்றவகையில் போதிய அரசமைப்பு ஏற்பாடுகளின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர் வொன்றினை முன்வைக்கவேண்டியுள்ளது. இலங்கையில் தொடாந்துவரும் தேசியபிரச்சினைக்கு தீர்வொன்றை அடைவதற்காக நாம் அனைத்து பங்குதாரர்களுடனும் தொடர்ந்தும் எமது ஈடுபாட்டில் இருப்போம் – என்றுள்ளது.

Related Posts