Ad Widget

ஐபிஎல் சூதாட்டம்: ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட 4 பேரின் பெயர்கள் வெளியாகின

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பிலான முகுல் முட்கல் குழுவின் விசாரணை அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிலரின் பெயர்களை நேற்று வெள்ளிகிழமை இந்திய உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

srinivasan

முகுல் முட்கல் குழுவின் அறிக்கையில் மொத்தமாக 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்.ஸ்ரீநிவாசனின் பெயரும் உள்ளதாக இந்திய உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

சுந்தர் ராமன், குருநாதன் மெய்யப்பன் மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தவிர மூன்று கிரிக்கெட் வீரர்களது பெயர்களும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனினும் அவர்களின் பெயர்களை தற்போது அம்பலப்படுத்தக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதனையடுத்து இந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த 7 பேரும் அடுத்த நான்கு நாட்களுக்குள் தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே அறிக்கையில் இந்த 7 பேர் தவிர இன்னமும் 5 முன்னணி கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் உள்ளதாகவும், அந்த பெயர்களை உச்சநீதிமன்றம் தற்போது வரை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளதாகவும் இந்த வழக்கின் மனுதாரர் ஆதித்யா வெர்மா செய்தியாளர்களிடம் கூறினார்.

விரைவில் நடக்கவிருந்த தேர்தல் தொடர்பான பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், நேற்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது பிசிசிஐ தரப்பு தெரிவித்தது.

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டங்களும் முறைகேடுகளும் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டதை தொடர்ந்து, நீதிபதி முட்கல் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.

அந்தக் குழு தனது விசாரணையின் முதல் அறிக்கையை கடந்த அகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி அன்று தாக்கல் செய்தது.

ஆரம்பகட்ட விசாரணையை மேற்கொண்ட நீதிபதி முட்கல் தலைமையிலான குழு தனது இடைக்கால அறிக்கையில், அப்போது பிசிசிஐயின் தலைவராகவும் தற்போது சர்வதேச கிரிகெட் சங்கத்தின் தலைவராகவும் உள்ள என்.ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட 13 பேரின் பெயர்களை குறிப்பிட்டிருந்தது.

சீல் வைக்கப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இடம்பெற்றிருந்த என்.ஸ்ரீநிவாசனின் பெயரைத் தவிர மற்றப் பெயர்களை நீதிமன்றம் அப்போது வெளியிடவில்லை.

தொடர்ந்து தற்போது மற்ற சில பெயர்கள் வெளியாகியுள்ளதால், விரைவில் மீதமுள்ள பெயர்களும் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முகுல் முட்கல் குழுவில் இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலியும் கிரிக்கெட் விவகாரங்கள் தொடர்பிலான வல்லுனராக செயல்பட்டு வருகிறார்.

அவர் தவிர வழக்கறிஞர்கள் எல்.நாகேஸ்வர ராவ், நிலாய் தத்தா மற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிபி மிஸ்ரா ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Related Posts