Ad Widget

ஐசிசி சேர்மன் பதவியிலிருந்து என்.சீனிவாசன் அதிரடி நீக்கம்: புதிய சேர்மன் சஷாங்க் மனோகர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சேர்மன் பதவியிலிருந்து என்.சீனிவாசன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர், புதிய சேர்மனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசியில் சேர்மன் பதவி வகிக்கும் இந்தியாவின் முறை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தோடு நிறைவடைகிறது. அதுவரை சஷாங்க் மனோகர் அந்தப் பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 86-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் ஐசிசி சேர்மன் பதவியிலிருந்து என்.சீனிவாசனை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக சஷாங்க் மனோகரை புதிய சேர்மனாக நியமிக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு பின்னர் அது நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்குர் கூறுகையில், “ஐசிசிக்கான பிசிசிஐயின் பிரதிநிதியாக சஷாங்க் மனோகர் இருப்பார். அவர் ஐசிசி சேர்மன் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்’ என்றார்.

ஐசிசி கூட்டங்களில் ஒருவேளை சஷாங்க் மனோகர் கலந்துகொள்ள முடியாதபட்சத்தில் அவருக்குப் பதிலாக பிசிசிஐயின் பிரதிநிதியாக சரத் பவார் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் கூறுகையில், “ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் மாற்று இயக்குநர்களை நியமித்துக் கொள்ளலாம் என்ற முறை ஐசிசியில் இருக்கிறது. அதனால் மாற்று இயக்குநராக சரத் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்றார்.

ஐசிசி சேர்மன் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்திய கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த சீனிவாசனின் ஆதிக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது. தற்போதைய நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவி மட்டுமே அவரிடம் உள்ளது.

கிரிக்கெட் உலகையே உலுக்கிய 2013 ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தால் கடும் விமர்சனத்துக்குள்ளான சீனிவாசன், அதன்பிறகு ஏற்பட்ட அடுத்தடுத்த சறுக்கல்களால் இப்போது அனைத்து பதவிகளையும் இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts