Ad Widget

ஏறாவூர் இரட்டைக் கொலை சந்தேக நபர்கள் யாழில் கைது: நகைகளும் மீட்பு!

மட்டக்களப்பு,ஏறாவூரில் இடம்பெற்ற தாய் மற்றும் மகன் இரட்டைக் கொலையின் சந்தேக நபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த வீட்டில் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் மிருசுவில் வடக்கு கொடிகாம் , யாழ்ப்பானம் எனும் முகவரியை சேர்ந்த ஒருவரையும் , சவுக்கடி தன்னாமுனை எனும் முகவரியை கொண்ட முச்சக்கர வண்டி சாரதி ஒருவரையும் கைது செய்த பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர், தொடர்ந்து முன்னெடுத்த விசாரணைகளின் பிரகாரம் யாழ்ப்பானம் மற்றும் சாவகச்சேரி பிரதேசத்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளையும் கைப்பற்றி உள்ளனர்.

விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், கொள்ளை பொருட்களும் தற்போது ஏறாவூர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் சந்தேக நபர்களை நீதி மன்றில் ஆஜர் செய்யும் நடவடிக்கைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் சவுக்கடி பிரதேசத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று 23 வயதான பீதாம்பரம் மதுவந்தி அவரது மகனான பீதாம்பரம் மதுசான் (11வயது) ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்ததனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே கொலையின் பிரதான சந்தேக நபர்கள் விஷேட விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பானத்தையும் அம்பாறை கோமாரி பகுதியையும் வசிப்பிடமாக கொண்ட பிரதான சந்தேக நபர் அண்மைக்காலமாக சவுக்கடியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்பவராக இருந்ததாகவும் , அவருக்கும் சவுக்கடி பிரதேசத்தில் உள்ள மற்றொரு சந்தேக நபரான ஆட்டோ சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட நட்பினை அடுத்தே குறித்த கொலைத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரின் ஆட்டோவிலேயே தான் கொலை செய்யப்பட்ட மதுவந்தி மற்றும் அவரின் மகன் மதுஷன் ஆகியோர் வழமையான பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுவதுடன் கொலைச் சம்பவம் இடம்பெற்ற தினம் நகையினை அடகு வைத்து விட்டு பணம் எடுத்து வந்ததும் இந்த ஆட்டோவிலேயே என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த குடும்பத்தின் நம்பிக்கையான ஆட்டோ சாரதியான அயலவரே கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது அதற்கு துணையாக நின்றவரும் கைதுசெய்யப்பட்டதாகவும் நகைகளும் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts