Ad Widget

எழுதுமட்டுவாழில் இந்து மயானத்தை அபகரிக்க படையினர் முயற்சி! மக்கள் எதிர்ப்பு

ARMY-SriLankaஎழுதுமட்டுவாழ் வடக்குப் பகுதியில் உள்ள இந்து மயானத்தை அரசு சுவீகரிக்கவுள்ள நிலையில் குறித்த மயானத்தைப் பயன்படுத்தும் 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

எழுதுமட்டுவாழ் பிரதேச ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதிக்கு அருகில் 52 ஏக்கர் காணியில் நிரந்தர படைமுகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த காணிக்கு அருகில் உள்ள இரண்டு ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட மயானக் காணிகளையும் சுவீகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் அதிகாரிகளுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

வேறு இடத்தில் ஆலயக் காணியொன்றினைப் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் தாம் காலம் காலமாக பயன்படுத்தி வரும் மயானத்தை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரியும் அந்த மக்கள் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

ஒட்டுவெளி, கரம்பகம், மருதங்குளம், கல்யாணக்குளம், மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத் திட்டம், எழுதுமட்டுவாழ் வடக்கு ஆகிய பிரிவுகளில் வாழும் ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்துக் குடும்பங்கள் இந்த மயானத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை, எழுதுமட்டுவாழ் தெற்கில் கடந்த வருடம் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட போதிலும் அங்குள்ள மயானப் பகுதி இன்னமும் கண்ணிவெடிகள் அகற்றப்படாததால் அந்த மக்களும் எழுதுமட்டுவாழ் வடக்கில் உள்ள இந்து மயானத்தையே பயன்படுத்தி வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Posts