Ad Widget

எழுக தமிழ் பேரணிக்கு தமிழரசுக் கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை! சிறிதரன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு தமிழரசுக் கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என கூட்டமைப்பில் அங்கம் வசிக்கும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

எனினும் கடந்த காலங்களை விட தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு சூழல் தற்போது உருவாகியுள்ள நிலையில் பொறுத்துப் பார்ப்போம் என்பதே எமது நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் நல்லெண்ண நடவடிக்கையாக தமிழ் மக்கள் பேரவையினர், பொது அமைப்புக்களைச் சேர்ந்தோர் மற்றும் தமிழரசுக் கட்சியினருக்குமான சந்திப்பு ஒன்று நேற்று முன்தினம் இரவு ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்றது.

வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தமிழரசுக் கட்சி சார்பில் அக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பு கிளிநொச்சி மாவட்டகிளைத் தலைவருமான சி.சிறீதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ் மக்கள் பேரவை சார்பில் மருத்துவர்களான லக்ஸ்மன், சிவன்சுதன், பாலமுருகன், ஜனார்த்தனன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் அருட் தந்தை ரவிச்சந்திரன், யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர் சரவணபவன், பேராசிரியர் சிவநாதன் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கெடுத்தனர்.

இந்நிலையில் இக்கூட்டத்தில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவளிப்பதில்லை என தமிழரசுக் கட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டதா? என அக்கட்சி சார்பில் பங்கேற்ற சிறீதரன் எம்பி.யிடம் கேட்டபோது, இப்பேரணியை எதிர்ப்பதாக நாங்கள் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என அவர் கூறினார்.

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி குறித்து இங்கு பேசப்பட்டது. இப்பேரணியை நடத்த வேண்டாம் என்றோ. அதனால் பிரச்சினை என்றோ நாங்கள் கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.

இப்பேரணியில் வலியுறுத்தப்படும் விடயங்களையே தமிழ் மக்கள் சார்பில் நாங்களும் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தற்போது அரசியல் அமைப்பு திருத்தத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அதில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சில விடயங்கள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த காலங்களைப் போல எதேச்சதிகாரமாக இல்லாமல் தமிழர் தரப்புக்களின் கருத்துக்களும் அரசியலமைப்பு மறுசீரமைப்பில் உள்வாங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அரசியல் யாப்பில் அதிகாரப் பகிர்வு உறுதி செய்யப்பட்டு தமிழர்களுக்குச் சாதகமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டால் அதனை பாராளுமன்றில் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை.

இதற்காக அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செயற்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு போராட்டத்தை நடத்தி தெற்கில் ஒரு எதிர்ப்பு நிலையை உருவாக்கி விடக் கூடாது.

அதன்மூலம் உருவாகி வரும் சாதகமான நிலையைக் குழப்பி விடக் கூடாது என்பதே எமது நோக்கம் எனவும் சிறீதரன் எம்.பி.தெரிவித்தார்.

எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள் தமிழ் மக்களுக்குச் சார்பான ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

அவ்வாறு கிடைக்கா விட்டால் மக்களுடன் இணைந்து நாங்களும் வீதியில் இறங்கிப் போராடுவோம்.

அதுவரை பொறுமை காப்போம் என்பதே தற்போதைய எங்கள் நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“எழுக தமிழ்” தொடர்பான மேலும் செய்திகளுக்கு..

Related Posts