Ad Widget

‘எழுக தமிழ்’ நிகழ்விற்கு தமிழ் மக்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டும்-தமிழ் சிவில் சமூக அமையம்

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மக்கள் மயப்பட வேண்டும். அது தனி நபர்களிலோ, குழுக்களிலோ தங்கியிருக்க முடியாது என்பதில் தமிழ் சிவில் சமூக அமையம் பூரண நம்பிக்கை கொண்டுள்ளது.

எமக்கான தீர்வை நாங்களே தான் பெற்றுக்கொள்ள முடியும், வேண்டும். அதை வேறு யாரும் பெற்றுத்தர முடியாது. தெளிவான அரசியல் நோக்கோடு எதிர் நோக்குப் பார்வையும் மக்கள் மையப்படுத்தப்பட்ட அணுகு முறையும் வரலாற்றுக் கட்டாயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

காலத்தின் கட்டாயம் மக்கள் மைய விடுதலைப் போராட்டத்தை வேண்டி நிற்கின்றது. புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்வாங்கி தமிழருக்கான தீர்வை சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் வழங்கும் என்பதில் கிஞ்சித்தும் நம்பிக்கையில்லை. புதிய அரசியலமைப்பு சமஷ்டி சனநாயக மாதிரியை கருத்தில் எடுக்கத்தானும் அரசியல் விருப்பு கொண்டுள்ளதாகத் தெரியவில்லை.

புதிய அரசியலமைப்பு நகல் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அது அடுத்த வருட ஆரம்பத்தில் பொதுசன வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு மக்களின் ஆணை பெறப்படும் என்று சிறிலங்கா அரசு கூறுகின்றது.

அரைகுறை தீர்வொன்று தமிழ் மக்களின் மீது திணிக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.

தமிழ் மக்களின் வாக்கைப் பெற்று அரசியலமைப்பை உருவாக்கிவிட்டு, அரசியல் தீர்வு தமிழ் மக்களிற்கு கொடுத்தாகிவிட்டது. பொறுப்புக்கூறலும் யுத்த குற்ற விசாரணையும் தேவையில்லை எனக்கூறி சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை முடக்கிவிடலாம். இது தொடர்பில் தமிழ் மக்களாகிய நாம் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களாகிய நாம் எமது தேசிய இனப்பிரச்சினையையும் நீதிக்கான போராட்டத்தையும் மக்கள் மையப்படுத்தி முன்னிறுத்த வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

‘பொறுப்புக்கூறல்’ பொறிமுறைகள் பாதிக்கப்பட்ட மக்கள் மையம் சார்ந்தது. அவர்களிடம் கலந்துரையாடியே பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அது தொடர்பில் நேர்மாறான அணுகுமுறையை கைக்கொண்டுள்ளது. இது காணாமல் போனோர் அலுவலகத்தை உருவாக்கிய விதத்தில் வெளிப்படையாகியது. பொறுப்புக்கூறலில் குற்றவாளிகளை தண்டிப்பது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் அரசியல் விருப்பை வெளிப்படுத்தவில்லை. இன்னும் குற்றவாளிகளை பாதுகாத்துக் கொள்ளவே விரும்புகின்றது. தமிழ் மக்கள் எதிர்பார்த்ததிற்கு நேர்மாறான உள்ளூர்ப்பொறிமுறையை முன்னெடுக்கின்றது. சர்வதேச விசாரணையோ கலப்பு பொறிமுறையோ யுத்த குற்ற விசாரணை தொடர்பில் நடைபெறும் சாத்தியம் இல்லாத தோற்றப்பாடு உருவாக்கப்படுகின்றது.

அரசியல் கைதிகள் தொடர்பிலோ, காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணிவிடுவிப்பு, பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், இராணுவமய நீக்கம் தொடர்பிலோ சிறிலங்கா அரசாங்கம் இதய சுத்தியுடன் செயற்படவில்லை.
இச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களாகிய நாம், மீண்டும் எமது கோரிக்கைகளை கூட்டாக வலியுறுத்தி மக்கள் மைய போராட்டத்தை முன்னிறுத்த வேண்டியது அவசியமாகின்றது.

தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சத்தை அடைந்தது. கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை இன்னும், சிங்கள, பௌத்த மயமாக்கலுக்கூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயக் கோரிக்கைகளை கட்டவிழ்க்கின்றது.
இவ் அரசியல் சூழலில் வரலாற்றுத் தேவையை உணர்ந்து அனைத்து தமிழ் மக்களும் அணி திரள்வது மிகவும் அவசியமாகின்றது.

‘எழுக தமிழ்’ நிகழ்விற்கு தமிழ் மக்கள் அனைவரும் பூரண ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையம் அனைத்து தமிழ் மக்களையும் கோரி நிற்கின்றது.

எழில்ராஜன்
குமார வடிவேல் குரூபரன்
இணைப்பேச்சாளர்கள்
தமிழ் சிவல் சமூக அமையம்

 

எழுக தமிழ் தொடர்பான மேலதிக செய்திகளுக்கு..

Related Posts