Ad Widget

எமது விடிவுக்கான கதவுகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை பொங்கும் திருநாளாகத் தைப்பொங்கல் இம்முறை புலர்ந்துள்ளது

நாம் அழுத கண்ணீரும் சிந்திய இரத்தமும் அதற்குக் காரணமான இன ஒடுக்குமுறை அரசை இன்று அதிகாரபீடத்தில் இருந்து தூக்கி வீசியிருக்கிறது. மாற்றத்துக்கான வாக்களிப்புடன் புதிய ஆட்சி சிம்மாசனம் ஏறியுள்ளது. அந்த மாற்றத்தை நோக்கிய பயணத்துக்குத் தமிழ் மக்களாகிய நாமும் கரங்கொடுத்தோம். அந்த வகையில் எமது விடிவுக்கான கதவுகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை பொங்கும் நாளாகத் தைப்பொங்கல் இம்முறை புலர்ந்துள்ளது என்று வடக்கு விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார்

ainkaranesan

தைப்பொங்கல் தொடர்பாக அவர்விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில்,

உலகத் தமிழ் மக்கள் அனைவரும் உழவர் திருநாளாகப் போற்றிக் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டு தினமாகிய தைப்பொங்கல் நன்னாளில் எனது மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.

தைப்பொங்கல் தமிழ் உழைப்பாளியின் தினம். தமிழ் மக்களின் பிரதான தொழிலான வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் வேளாண்மை சிறப்பதற்கு உதவிய இயற்கைக்கும், உற்பத்தி முறைமையில் பிரதான கருவிகளாக இருந்து வந்த காளை மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் திருநாள். சாதி, மத பேதங்கள் கடந்து ஒட்டுமொத்தத் தமிழர்களும் கொண்டாடும் பண்பாட்டுப் பெருவிழா. இது தமிழ் இனத்துக்கு மட்டுமேயுரிய புனிதச் சடங்கு.

விமானக் குண்டு வீச்சுகளும், எறிகணைகளும், துப்பாக்கி வேட்டுகளும் எமது தாய்நிலத்தைக் குருதி வெள்ளத்தால் நிறைத்த நாட்களிலும், ஒப்பாரி ஒலிகள் மத்தியிலும் எமது பொங்கல் விழாக்கள் மங்கல நாட்களாகக் கொண்டாப்பட்டன. இழப்புகளால் சூழப்பட்ட போதிலும், இலட்சியம் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் எங்கள் பொங்கற் பானைகள் பொங்கி வழிந்தன.

எமது விடுதலைப் போராட்டம் 2009 மே மாதம் பாரிய பின்னடைவைச் சந்தித்தபோதும், நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என இடிந்து போய்விடவில்லை. அகதி முகாம்களிலும் எங்கள் தைப்பொங்கலைப் பொங்கினோம். இருக்கும் ஒரு பிடி அரிசியைப் பொங்கியேனும் சூரிய தேவனுக்குப் படையல் செய்தோம். போர்க்காலத்தைவிடப் போர் முடிந்த பின்பு எம்மைச் சுற்றி ஒடுக்கு முறைகள் இரும்பு வலையாகப் பின்னப்பட்டபோதும், எமது பண்பாட்டு அடையாளங்களை இழந்துவிடாமல் தமிழராக நாம் நிமிர்ந்து நிற்கின்றோம்.

நாம் அழுத கண்ணீரும் சிந்திய இரத்தமும் அதற்குக் காரணமான இன ஒடுக்குமுறை அரசை இன்று அதிகார பீடத்தில் இருந்து தூக்கி வீசியிருக்கிறது. மாற்றத்துக்கான வாக்களிப்புடன் புதிய ஆட்சி சிம்மாசனம் ஏறியுள்ளது. அந்த மாற்றத்தை நோக்கிய பயணத்துக்கு தமிழ் மக்களாகிய நாமும் கரம் கொடுத்தோம். அந்த வகையில் எமது விடிவுக்கான கதவுகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கை பொங்கும் திருநாளாகத் தைப்பொங்கல் புலர்ந்துள்ளது.
எனினும், எமது உரிமைகளை எவரும் தாமாகத் தந்துவிடப் போவதில்லை. சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் இப்போது காய்கள் இடமாற்றப்பட்டுள்ளனவே தவிர, பேரினவாத சிந்தனையில் பெரும் மாற்றங்கள் நிகழும் என்பதற்கான உத்தரவாதங்கள் எவற்றையும் எவரும் தரவில்லை. இந்நிலையில் புதிய நம்பிக்கையோடு தளராத உறுதியுடனும் உருக்குப் போன்ற ஐக்கியத்துடனும் மிகுந்தஅரசியல் சாணக்கியத்துடனும் எமது இலட்சிய பயணத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்று தமிழர் திருநாளாம் இத்தைத்திருநாளில் திடசங்கற்பம் கொள்வோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts