Ad Widget

எமது மகளைக் கடத்தியது ராஜித்தவின் மகனே! பெற்றோர் குற்றச்சாட்டு

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் இளைய மகனால், தனது மகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக, குறித்த பெண்ணின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

rajitha

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ராஜித்த சேனாரத்னவின் மகனான எக்சத் சேனாரத்ன தனது மகளை வாகனம் ஒன்றில் வந்து கடத்திச் சென்றதாக அவரது தந்தை இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் 16 வயதான தனது மகள் கடத்தப்பட்ட விடயம் தொடர்பில் குறுந்துவத்தை பொலிஸ் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியோரிடம் முறைப்பாடு வழங்கியும் பலனில்லை எனவும் அவர் கூறினார்.

அன்று முதல் இன்றுவரை தமது மகளை தன்னுடனேயே வைத்துள்ளதாகவும், இதுவரை அவரை பார்க்கவோ தொடர்பு கொள்ளவோ முடியவில்லை எனவும் பெண்ணின் தந்தை மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் தானும் தன் மனைவியும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் தமக்கு நியாயத்தைப் பெற்றுத் தருமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரிடமும் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என அமைச்சர் ராஜித்த, கூறியுள்ளார்.

அவ்வாறு இடம்பெற்றிருப்பின் பொலிஸில் முறையிட்டு நீதிமன்றத்திற்குச் சென்று வழக்குத் தொடர்ந்திருக்க முடியும் எனவும், ஊடகவியலாளர் சந்திப்பு தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் குறித்து சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அலுவலகத்தில் மேற்கொண்ட விசாரணைகளில் அவருக்கு 16 வயதிலும் அதிகம் என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பெற்றோருடன் இருக்க தனக்கு விருப்பம் இல்லை எனவும், தன்னுடன் இருக்கும் இளைஞருடன் இருக்கவே விரும்புவதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை சட்டத்தின் படி 16 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண் விரும்பும் ஒருவருடன் தங்கியிருப்பது குற்றம் இல்லை எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

Related Posts