Ad Widget

எமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும் – கே.என்.டக்ளஸ் தேவானந்தா

dak-thevananthaaaஎமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நாமே தீர்வுகாண வேண்டும் என்பதுடன், இதற்காக சர்வதேச நாடுகளை பிரதானமாக நம்பிப் பயனில்லையென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தாம் ஆரம்பத்திலிருந்து தீர்க்கதரிசனமாக கூறிவந்த உண்மை சரியென்று மறுபடியும் ஒருமுறை உணர்த்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

நெற்றய தினம் வெளியிடப்பட்டுள்ளஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும் என்பது போல், எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய பிரதான பொறுப்பு தமிழ் பேசும் கட்சிகளின் தலைமைகளுக்கே உண்டு.

நாம் சர்வதேச நாடுகளை பிரதானமாக நம்பியிருக்க முடியாது. தேவையென்றால், பிரசவத்தின்போது ஒரு மருத்துவிச்சியின் கடமையை ஆற்றுவது போல், சர்வதேச நாடுகள் முன்வந்தால் அதை வரவேற்கலாம். ஏனெனில், எமது மக்கள் சுமந்த வலிகளையும் வதைகளையும் நாம் மட்டுமே உணர்வோம்.

எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய பொறுப்புணர்வு எமக்கு மட்டுமே இருக்க முடியும். இதையே நாம் நீண்டகாலமாக தொலைதூர நோக்கில் தீர்க்கதரிசனமாக கூறி வருகிறோம்.

மேலும், சர்வதேச நாடுகளின் துணையுடன் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம் என்றும் உலக நாடுகள் எமது பிரச்சினையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன என்றும் உலக நாடுகளுக்கு எமது ஒற்றுமையின் பலத்தை காட்ட தமக்கு மட்டுமே வாக்களியுங்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களுக்கு ஆசை வார்த்தைகளை அள்ளி வழங்கி, தேர்தல் வாக்குறுதிகளாகக் கூறி வந்திருக்கிறது.

ஆனாலும், இன்று நடந்துவரும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மாநாட்டின் மூலம் எமது மக்களுக்கு எந்த விமோசனங்களும் கிடைக்கப்போவதில்லை என்றும் தாம் நம்பியிருந்த உலக நாடுகள் கைகளை விரித்து, எமது மக்களை ஏமாற்றி விட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீலிக்கண்ணீர் வடித்து, ஊடகங்களுக்கு செய்தி கொடுத்து வருகிறது.

நாம் ஏற்கெனவே தீர்க்கதரிசனமாகக் கூறிவந்த உண்மைகளை ஏற்று நடந்திருந்தால், அடுத்தவர்களை நம்பியிருக்காமல் எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும் என்ற எமது நடைமுறைச் சாத்திய வழிமுறைகளை விரும்பியிருந்தால், உலக நாடுகள் எமது மக்களை ஏமாற்றி விட்டதாக இன்று அழுது புலம்பி, நாடகம் ஆட வேண்டிய அவசியம் இங்கு நடந்திருக்காது.

சர்வதேச நாடுகளையோ அன்றி சர்வதேச நாடுகளிடம் முறையிட்டு எமது மக்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம் என்று தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ இனி ஒருபோதும் நம்பப் போவதில்லை என்ற உண்மையை எமது மக்கள் மறுபடியும் ஒருமுறை இன்று உணர்ந்து கொண்டுள்ளனர்.

சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்துவோம். வெறும் போலி வீர உணர்ச்சிகள் வேண்டாம் என்று முடிவு செய்வோம். சாணக்கிய, தந்திர, மதிநுட்ப சிந்தனைகளால் மட்டுமே எமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்போம்.

உலக நாடுகளிடம் முறையிட்டு எமது மக்களுக்குத் தீர்வு பெற்றுத் தருவோம் என்ற போலி வாக்குறுதிகளை இனியும் வழங்காமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மதிநுட்ப சிந்தனை வழி நின்று செயற்பட முன்வர வேண்டும்’ என மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts