Ad Widget

எமது தேசத்தின் பெறுமதியான வளம் மக்கள்! – சனாதிபதி

பொதுநலவாய நாடுகளின் கலாசார பல்வகைமையை கொண்டாடுமுகமாக 2014 ஏப்பிறல் மாதம் 26ஆம்
திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற சிங்கள தமிழ் புத்தாண்டு வைபவத்தில் பொதுநலவாய
பேரவையின் தலைவர் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரை

10259837_10151984325886467_6836828609185367794_n

வணக்கத்திற்குரிய தேரர்களே, ஏனைய மதத் தலைவர்களே,

மாலைதீவின் முன்னாள் சனாதிபதி மௌமுன் அப்துல் கையும் அவர்களே. நசீர் இப்ராஹிம் அம்மையார்
அவர்களே, ககௌரவ பிரதம அமமச்சர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே,
உயர் ஸ்தானிகர்களே, தூதர்களே, நண்பர்களே,

பொதுநலவாய குடும்பத்தின் பல்கலாசார பல்வகைமையை கொண்டாடுகின்ற இந்த சந்தர்ப்பத்தில்
பொதுநலவாய பேரவையின் தற்போதைய தலைவர் என்ற வகையில் நான் உங்கள் அனைவரையும்
அன்புடன் வரவேற்கின்றேன். இச்சந்தர்ப்பத்தில் கௌரவ அதிதியாக கலந்துகொள்வதற்கு இலங்கையின்
மிக நெருங்கிய நண்பரான மாலைதீவின் முன்னாள் சனாதிபதி மாண்புமிகு மௌமுன் அப்துல் கையும்
அவர்கள் இங்கு கழிக்கின்ற தனது ஓய்வுகால பொழுதுபோக்கின் ஒரு பகுதியை எம்மோடு கழிக்க முன்
வந்தமை தொடர்பாக எனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மாண்புமிகு அப்துல் கையும் அவர்களும் இப்ராஹிம் அம்மையாரும் எனது மற்றும் எனது பாரியார்
ஷிரந்தியின் நெருங்கிய நம்பிக்கைக்குகந்த நண்பர்கள் ஆவார்கள். இந்நாட்டில் கல்வியைப் பெற்றமை
அவர்கள் இந்நாட்டுடன் பேணுகின்ற நீண்டகால தொடர்பு இலங்கைக்கும் மாலைதீவுக்குமிடையில்
வலுவான இணைப்பை ஏற்படுத்துவதற்கு உதவியுள்ளது.

இச்சந்தர்ப்பத்தை குறிக்குமுகமாக அன்பான நல்வாழ்த்து செய்திகளை அனுப்பிய தெற்காசியா உள்ளிட்ட
அமைப்பின் அங்கத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பல்வேறு பூகோள வலயங்களின் பொதுநலவாய
அரச தலைவர்களுக்கும் பொதுநலவாய செயலாளர் நாயகத்திற்கும் எனது நன்றியைத்
தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். இம்மாலைப் பொழுதில் பொதுநலவாய பேரவையின் கலாசார
பல்வகைமையை நாம் கொண்டாடுவதால் நான் உயர் ஸ்தானிகர்களை விசேடமாக வரவேற்கின்றேன்.

கௌரவ அதிதிகளே. அன்பர்களே,

சிங்கள, தமிழ் மக்களால் கொண்டாடப்படுகின்ற இலங்கையின் மிக முக்கியமான தேசிய வைபவமான
இம்மகிழ்ச்சி ததும்பும் சிங்கள, தமிழ் புத்தாண்டு காலம் பொதுநலவாய கலாசார பல்வகைமையை
கொண்டாடுவதற்கு சிறந்ததோர் சந்தர்ப்பமாகுமென நான் நினைக்கின்றேன். இத்தேசிய வைபவம்
அறுவடைக்காலத்தின் இறுதியைக் குறிக்கின்ற அதேவேளையில் அது ஆசியாவின் ஏனைய பல
பிரதேசங்களில் கொண்டாடப்படுகின்றது. செழிப்பான விளைச்சலை பெறுவதைப்பற்றியும் கடந்த ஆண்டில்
பெற்ற ஏனைய பயன்களுக்கும் நன்றி கூறுவதற்கும் புத்தாண்டு எதிர்பார்ப்புகளையும் அனைத்து மக்களின் நன்மையையும் முதன்மையாகக்கொண்டு புத்தாண்டை ஆரம்பிப்பதற்கு இது பொறுத்தமான காலமாகும்.

கௌரவ அதிதிகளே. அன்பர்களே,

மக்களிடையே மனிதாபிமான பண்புகளை கட்டியெழுப்புவதற்கு கலாசார மரபுரிமைகளும் நேர்மையான
முன்மாதிரியும் அவசியமாகும். இப்புத்தாண்டு கொண்டாட்டம் போன்ற ஒரு நாட்டின் கலாசார
சொத்துக்களை நினைவுகூர்வதற்கு அது தேசிய ஒற்றுமையையும் சுபீட்சத்தையும் நோக்கி செல்கின்ற
தேசத்தின் கூட்டு பயணத்தை குறிப்பதன் காரணமாக முக்கியத்துவம் பெறுகின்றது.

உலகம் முழுவதிலும் 53 நாடுகளைக் கொண்டுள்ள பொதுநலவாய நாடுகளின் அடையாளம் அங்கு
வாழ்கின்ற மக்களின் கலாசார பல்வகைமையினால் உருவாக்கப்படுகின்றது.
பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்ற கலாசாரங்களின் எண்ணிக்கையிலும் அதன் அங்கத்தவர்களின்
பொருளாதார, சமூக சந்தர்ப்பங்களிலும் சுட்டிக்காட்டப்படுகின்ற விதத்தில் இவ்வமைப்பின் சக்தியாக
இருப்பதும் இப்பல்வகையாகும்.

கௌரவ அதிதிகளே. அன்பர்களே,

பொதுநலவாய பேரவை இறைமை அரசுகளின் தொண்டர் ஒன்றியமாகும். ஆகவே, அதில் பல்வகைமை
இருக்கின்றபோதும் பெரிய அல்லது சிறிய செல்வந்த அல்லது செல்வந்தரல்லாத, பல்வேறு அபிவிருத்தி
நிலைகளுடன் அனைத்து அங்கத்துவ நாடுகளும் அவற்றின் பொருளாதார ஆற்றல் அல்லது அமைப்புக்கு
வழங்குகின்ற நிதிப் பங்களிப்பை பொருட்படுத்தாமல் ஒரேவிதமான பங்காளர்களாகவும் அன்புடன்
பகிர்ந்துகொண்ட விழுமியங்களை அனுபவிக்கின்றவர்களாகவும் இருக்கின்றார்கள். இவ் அந்தஸ்தின்
சமத்துவம் பொதுநலவாயத்தின் கருப்பொருளாக இருக்கின்ற அதேநேரத்தில் அதை பாதுகாக்கவும் வேண்டும்.

பொதுநலவாய பேரவை பிளவுபடுவதை தடுப்பதற்காக நமது சமூகத்தை செறிவுமிக்கதாக்குகின்ற
பல்வகைமையை கூருணர்வுடனும் தொலை நோக்குடனும் முகாமைப்படுத்த வேண்டுமென்பதை நாம்
மறந்துவிடக் கூடாது. ஆகவே, சமமான நிலையில் இருந்து விரிவான அங்கத்துவத்தின் தேவைகளை
அணுகுவது அமைப்பு அத்தியாவசியமாக செய்யவேண்டிய பணியாகும். பிளவுபட்ட பொதுநலவாயத்தால்
அதன் அடிப்படைக் கொள்கைகள் நிறைவேறாது.

கௌரவ அதிதிகளே. அன்பர்களே,

கடந்த ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்களின் மகாநாட்டின்போது
பொதுநலவாயத்தின் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் இதயத்தோடு இணைந்த சமூக பொருளாதார
பிரச்சினைகள் மீது கவனம் செலுத்துகின்ற நடைமுறை சாத்தியமான செயல்முறை ஒன்றின்
அவசியம்பற்றி நான் வலியுறுத்தினேன். பொருளாதார முன்னுரிமை மிக முக்கியமானதாக இருப்பினும்
எமது தேசத்தின் பெறுமதியான வளம் மக்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

தலைவர்கள் என்றவகையில் நாம் மானிட மூலதனத்தின் தரமான பெறுமதியை வலுப்படுத்துவதற்கும்
மக்களிடையே தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்பார்ப்பினதும்
வழிகாட்டலினதும் கலங்கரை விளக்கமாக பொதுநலவாய பேரவை தொடர்ந்தும் அதன் அனைத்து
மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். நமது நாடுகளில் மிகவும் தொலைதூர பிரதேசங்களில்
வாழ்கின்ற மக்களிடம் அவர்கள் இச் சிரேஷ்ட குடும்பத்தின் அங்கத்தினர்கள் என்ற உணர்வுடன் செல்ல
வேண்டும். மறுபுறம் அதன் அனைத்து மக்களுக்கும் பயனுறுதிமிக்க வகையில் செயலாற்றும் பொறுப்பு
அமைப்புக்கு உண்டு. நடுத்தீர்ப்பு சபையாக அல்லது ஒருவரை ஒருவர் பிரிக்கின்ற அமைப்பாக அல்லாமல்
அது அங்கத்துவ அரசுகளுக்கிடையில் நல்லிணக்க பாத்திரமொன்றை நிறைவேற்ற வேண்டும்.
சகோதரத்துவத்துடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் தலைசிறந்த நிலையை எம்மால் அடைய
முடியும்.

நண்பர்களே,

இப்புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து புதுப்பிக்கப்பட்ட எதிர்பார்ப்புகள், சுபீட்சம், நட்புறவு
என்பவற்றை மனதில் வைத்துக்கொண்டு நான் உங்கள் அனைவருக்கும் உங்களுடைய தொழில்சார்ந்த
வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சிகரமான எதிர்வரும் ஆண்டுக்காக
பிரார்த்திக்கின்றேன். இவ்வமைப்பு தொடர்ந்தும் அதன் அனைத்து மக்களுக்கும் ஏற்புடையதாகவும்
பயனளிக்கக்கூடியதாகவும் இருப்பதற்கு இலங்கை அனைத்து அங்கத்துவ நாடுகளுடனும் ஆழமான
தொடர்புகளுடன் இணைந்து செயலாற்றும் என்பதை பொதுநலவாயத்தின் தற்போதைய தலைவர் என்ற
வகையில் நான் சான்றுரைக்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் சௌபாக்கியமும் நிறைந்த புத்தாண்டாக இப்புத்தாண்டு மலர
வாழ்த்துகின்றேன்.

உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசீர்வாதம் கிட்டுக.

Related Posts