Ad Widget

எமக்கு தேவையான தீர்வு , வேறு எவருக்குமானது அல்ல. காலம் காலமாக அழிவுக்குட்படுத்தப்பட்ட எமது எமது மக்களுக்கானது- பேரவை இணைத்தலைவர் லக்ஸ்மன்

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்வரைபு வெளியீட்டில் பேரவையின் இணைத்தலைவர் வைத்தியர்  லக்ஸ்மன் ஆற்றிய உரை

தமிழ் மக்கள் பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு ஏறத்தாழ ஒன்றரை மாதங்களில் மீண்டும் உங்கள் அனைவரையும் இந்த இடத்தில் சந்திப்பதில் தமிழ் மக்கள் பேரவை பெருமகிழ்ச்சி அடைகிறது.அதிலும் குறிப்பாக , எமது மக்களுக்கான அரசியல் தீர்வு முன்வரைபு வரைதல் எனும் பொறுப்பான ஒரு இலக்கை நிர்ணயித்து , குறிப்பிட்ட காலத்துள்,அதனை அடைந்த மன நிறைவுடன் உங்களை பகிரங்க அரங்கு ஒன்றில் சந்திப்பதில் நாம் பெரிதும் மனநிறைவடைகிறோம்.
இந்த இலக்கை குறித்த காலப்பகுதிக்குள் அடைய அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அனைவரையும் குறித்து நாம் பெருமிதம் அடைகிறோம்.
இந்த தீர்வு முன்வரைபு உருவாக்கப்பட்டு , அது எமது மக்களின் முன்னால் வைக்கப்படுகின்ற இன்றைய இந்த நிகழ்வினை , எமது இனத்தின் வரலாறு , ஒரு முக்கிய புள்ளியாக குறித்துக்கொள்ளும்.எமக்கு தேவையான தீர்வு , வேறு எவருக்குமானது அல்ல. காலம் காலமாக அழிவுக்குட்படுத்தப்பட்ட எமது எமது மக்களுக்கானது, எமது மக்களின் நியாயமான இருப்புக்கானது.எனவே, எமது மக்களுக்கான இந்த தீர்வுவரைபானது , பிறருக்கு முன்னால் வைக்கப்படுவத்ற்கு முன்னர், எமது சொந்த மக்களுக்கு எந்த வித மறைப்புமின்றி வெளிப்படுத்தப்பட்டு , அறிவுபூர்வமாக ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு மேலும் மெருகூட்டப்பட வேண்டும்.இது ஒரு முன்வரைபே.மக்களின் பங்களிப்புடன் இது இறுதிவடிவம் பெறும்.

வெறும் உணர்வுவயப்பட்ட , வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்ட மேடைப்பேச்சிலிருந்து விலகி , ஒரு அரசியல்மயப்படுத்தபட்ட சமூகமாக, அறிவுபூர்வமாக இதை நாம் அணுகி, கலந்துரையாடல்களுக்கு உள்ளாக்கி, மக்களின் விருப்பு இது தான் என்பதை பேச்சு மேடையில் ,எமது அரசியல் தலமைகள் ,ஆணித்தரமாக முன்வைக்கவேண்டும்.

மிகவும் சிக்கலான சவாலான இந்த பணியை , அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துச்சென்ற தமிழ் மக்கள் பேரவையின் அரசியல்தீர்வு வரைபுக்கான உபகுழுவினருக்கு எமது பாராட்டுதல்களை மக்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.நாம் இங்கு இந்த நிபுணர்குழுவிற்கு பாராட்டுதல்களை தெரிவிக்கின்றோமே தவிர, நன்றியை அல்ல. ஏனெனின், நான் ,எனது அங்குரார்ப்பண பேச்சில் குறிப்பிட்டது போல , இது நாம் ஒவ்வொருவரும் எமது இனத்துக்காக செய்யவேண்டிய கடமை. இதையே இந்த நிபுணர்குழுவும் , எமது மக்களுக்காக தமக்கு புலமையை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி, எமக்கு இந்த முன்வரைபை உருவாக்கி தந்துள்ளார்கள்.

இதில் ஈடுபட்ட அனைத்து ஆளுமைகளும், இதற்காக , பல்வேறுபட்ட இடங்களிலிருந்தும் தமது தனிப்பட்ட வேலைகளை விடுத்து, நேரத்தை ஒதுக்கி , எமது இனத்துக்காக உழைத்து இவ்வரைபை உருவாக்கி, எம் அனைவருக்கும் வெளிப்படையான ஒரு முன்னுதாரணமாக விளங்கியிருக்கிறார்கள்.உண்மையில் இது மிகவும் சிக்கலான பணி . அவர்களின் இந்த சிறப்பான பணிக்கு மீண்டும் மனம் நிறைந்த பாராட்டுதல்களை, மக்கள் சார்பாக, தெரிவித்து கொள்கிறோம்.
தமிழ் மக்கள் பேரவையானது ,திடீரென ஒரு நாளில் உருவான அமைப்பு அல்ல, ஒரு இரவில் உருவான கருத்தியலும் அல்ல. 2009 இற்கு பின்னரான இந்த சூழமைவில்தான் , இப்படியான மக்கள் சக்திகள் கொள்கைவழி ஒன்றினைந்து நிற்கவேண்டிய தேவை மேலும் வலுப்பட்டது . இந்த ஒன்றிணைவு தேர்தல்களுக்கு அப்பாற்பட்டு, கொள்கை வழியானதாக இருக்கவேண்டும் என்பதற்காக 2009 இலிருந்து , திரைக்கு வராத, இப்படிப்பட்ட பல்வேறு முயற்சிகள் பல்வேறுதரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு இருந்தது .

துரதிர்ஷ்டவசமாக அவை பெரியளவில் வெற்றியை அளிக்கவில்லை .ஆனால், இன்றைய நிலமை இன்னும் சிக்கலானது .பல்வேறுபட்ட சக்திவாய்ந்த தரப்புகளின் கைகள், எம்மை உள்ளும் புறமுமாக சூழ்ந்துநின்று ,எமது மக்களின் மனவிருப்புகளையும் அபிலாசைகளை கருத்திற்கொள்ளாது , தாம் விரும்பிய பாதையில் எம்மை நடக்க வைக்க , வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பல்வேறு அழுத்தங்களை பிரயோகிக்கும் நடவடிக்கைகள் நிறைந்த சிக்கலான காலகட்டமொன்றில் , எமது மக்களின் பெயரால் ,இத்தனை காலம் நாம் அநுபவித்த இழப்புகள் , எமக்காக மேற்கொள்ளப்பட்ட தியாகங்களின் பெயரால் , நாம் கொள்கைவழி ஒன்றிணைந்து நிற்க வேண்டிய தேவை மேலும் மேலும் வலுப்பட்டுள்ளது.

இச்சூழமைவிலேயே, தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம் பெற்றது.இதற்கான கலந்துரையாடல்கள் சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு, எமது அடிப்படைத்தீர்வு மற்றும் நடந்த அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சம்பந்தமாக ஒத்த கருத்துடையோரை முதற்கட்டமாக இணைத்து ,அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.எமது அங்குரார்ப்பண கூட்டத்திலும் பின்பும் சொல்லப்பட்டது போல , எமது அடிப்படைகளுடன் உடன்படுபவர்களை,தொடர்ந்தும் உள்வாங்கி , இது மேலும் விரிவுபடுத்தபடும் . விரிவுபடுத்தப்பட வேண்டும். மேலும் மேலும் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும்.இது நாம் ஆரம்பத்திலிருந்தே கூறிவருவது போல , தமிழ் மக்கள் பேரவையானது , தேர்தல் அரசியலுக்கு அப்பாலானது.எமது மக்களின் அரசியல் பயணமானது தேர்தல்களுக்கானது அல்ல என்பதை தமிழ் மக்கள் பேரவை ஆணித்தரமாரமாக மீண்டும் வலியுறுத்துகிறது.

எமது மக்களின் வாழ்வும் இருப்பும் கூட அரசியல்தான். உணர்வுவயப்பட்ட அணுகுமுறையை விடுத்து , எமது பட்டறிவின்பாற்பட்டு அறிவுபூர்வமான சிந்தனையுடன் சவால்களை எதிர்கொள்வதுதான், சவாலகளை வெற்றியுடன் கடப்பதற்கான வழிமுறை. இதையே எமது அரசியல் கட்சிகளும் அரசியல் சக்திகளும் செய்யவேண்டும். மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவேண்டும்.இவ்வாறான மக்கள் மயப்பட்ட பங்குபற்றலுடன் கூடிய அரசியலையே தமிழ் மக்கள் பேரவை அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்கிறது .தேர்தல் அரசியலுக்கும் கட்சி அரசியலுக்கும் அப்பாற்பட்ட எமது விடிவு நோக்கிய பயணத்தையே தமிழ் மக்கள் பேரவையானது தனது பணியாக முன்னெடுத்துச்செல்லும்.இது , எந்தவொரு இனத்துக்கோ எந்தவொரு தரப்புக்கோ எதிரானது அல்ல.எனினும், இது எமக்கு மக்களை அடக்கநினைப்பவர்களுக்கும் , எமது அடையாளங்களை சிதைக்க முற்படுபவர்களுக்கும் , மக்களின் அரசியல் முனைப்பை அடக்க முனைபவர்களுக்கும் எதிராக தொடர்ந்தும் குரல் கொடுக்கும்.

இந்த வேளையில் , தமிழ் மக்கள் பேரவையின் அங்குரார்ப்பணத்தை தொடர்ந்து வெளிவந்த ஆக்கபூர்வமான விமர்சனங்கள் அனைத்தையும் நாம் நன்றியுடன் கருத்திற் கொள்கிறோம்.இவை எம்மை மேலும் வழிப்படுத்தும்.குறிப்பாய், ஆரம்ப கட்டத்தில் பெண்பிரதிநிதித்துவம் இல்லாமை குறித்த விமர்சனத்தை நாம் தலைகுனிந்து ஏற்றுக்கொள்கிறோம். அதை ஓரளவிற்கு நிவர்த்தி செய்த்துள்ளோம் என்பதையும் கூறிக்கொள்கிறோம். ஆரம்பக்கூட்டத்தில் பெண்பிரதிநிதித்துவம் இல்லாமை எந்த வித கொள்கை அடிப்படையிலுமானது அல்ல. இது ஒரு நடைமுறை ஒழுங்குபடுத்தலில் வந்த சிக்கல் மட்டுமேயாகும்.எமது இனமானது , சாதி ,சமய ,சமூக , பால் , பிரதேச வேறுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் அற்ற ஒரு சமுதாயமாக உருவாக வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் பேரவையானது உறுதியாக இருக்கிறது.

பேரவையானது எந்த ஒரு பின்புல சக்திகளுமின்றி உருவாகி, ஒன்றரை மாதங்களே கடந்துள்ளது.ஆனால், எம்மீது சுமத்தப்பட்டுள்ள பணிகளும் எதிர்பார்ப்புகளும் அதிகமானது.இதன்போது நாம் செயற்படுகின்ற முறைகளில் இருக்கின்ற ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் வழிநடத்தல்களையும் நாம் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றோம்.அத்தோடு, பார்வையாளர்களாக அல்லாது பங்காளிகளாக அனைவரும் மாறவேண்டும் என்பதையும் நாம் வேண்டி நிற்கின்றோம்.

இந்த நேரத்தில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படுகின்ற ஊடகவியலாளர்களையும் அவர்களது சகோதரத்துவ உதவிகளையும் நாம் இந்த வேளையில் பாராட்டுகின்றோம்.பேரவையின் தேவை , அவற்றின் முன்னுள்ள பணிகள் பற்றி எழுதி மக்கள் முன்னே கொண்டு சென்றதில் உங்களின் பங்கு மகத்தானது.எனினும், இன்று முன்வைக்கப்படுகின்ற தீர்வு முன்வரைபு குறித்தும் அதற்கான மக்கள் பங்களிப்பு குறித்தும் பெரிதும் செயலாற்ற வேண்டியது ஊட்கவியலாளர்களாகிய நீங்கள் தான். அரசியல் நிபுணர்குழுவும் பணியை மக்கள் முன்னால், முறையாக கொண்டு செல்ல வேண்டிய .பெரும் பொறுப்பு ,உங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது,இந்த அஞ்சலோட்டத்தில் உங்களிடம் நிபுணர் குழுவை உங்களிடம் கையளிக்கப்பட்ட தீர்வுத்திட்ட முன்வரைபை மக்களிடம் கொண்டு செல்வதில் நீங்கள் திறைமையாக செயற்படுவீர்கள் என நம்புகின்றோம்.

இந்த தீர்வு முன்வரைபை மக்கள் மத்தியில் கலந்துரையாடல்களுக்கு கொண்டு செல்வதில் எமக்கு உறுதுணையாக இருந்து இவை குறித்த கலந்துரையாடல்களை ஒழுங்குபடுத்த எமக்கு உதவுமாறு சனசமூக நிலையங்கள் இளைஞர் கழகங்கள் ,தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக இயக்கங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இறுதியாக , எமது மக்களின் நலன் கருதி , தனிப்பட்ட குறுகிய நலன்களை களைந்து கொள்கையின் வழி ஒன்றிணைந்து செயற்படவேண்டிய நிகழ்காலத்தேவையை மீண்டும் வலியுறுத்துகிறோம்.எனவே அனைவரும் எம்மிடையே உள்ள வேறுபாடுகளையும் கசப்புணர்வுகளையும் மறந்து , உன்னதமான பொதுநோக்கு ஒன்றிற்காக நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு அனைவரையும் அழைக்கிறேன்.

Related Posts