Ad Widget

என்னைக் கைதுசெய்ய முயற்சி! பின்னணியில் ரணில் என்று குற்றம்சாட்டுகின்றார் மஹிந்த!!

“எனது மீள்வருகை அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காக என்னைக் கைதுசெய்ய அரசு முயற்சிக்கின்றது.” – இவ்வாறு கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ.

“பழிவாங்கலின் பின்னணியில் பிரதமர் ரணிலே உள்ளார். என்னையும் குற்றவாளியாக்கி பழிவாங்கவே ரணில் முயற்சிக்கின்றார். ஆனால், சவால்களுக்கு முகம்கொடுக்க நான் தயார்” – என்றும் அவர் கூறியுள்ளார்.

போரால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினரின் குடும்பத்தினரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, கொழும்பு – நாரஹேன்பிட்டியவிலுள்ள அபயராம விஹாரையில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்க நாம் பெரும் தியாகத்தை செய்தோம். நாம் ஆட்சியைக் கையளித்தபோது நாட்டின் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால், தற்போதைய அரசு பணம் இல்லை என்று கூறுகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகூட பணம் இல்லை என்று கூறுகின்றார். இவர்களது முகாமைத்துவத்தில் பிரச்சினை இருக்கின்றது என்பது இதிலிருந்து தெரிகின்றது. அத்துடன், ஆட்சி நடத்த முடியாத நிலைமையையும் இது காட்டுகின்றது.

குறுகிய காலத்துக்குள்ளேயே முட்டி, மோதிவிட்டனர். இது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். கள்வர், கள்வர் என்று ஒருவரை 100 தடவைகள் கூறினால் மக்கள் அதை நம்பிவிடுவார்கள். அதைத்தான் இந்த அரசு செய்கின்றது.

தேர்தல் காலத்தின்போது கள்வர்களைப் பிடிக்கப்போகின்றோம் என்றனர். இப்போது கள்வர்களைக் கைதுசெய்கின்றோம் என்கின்றனர். என்னிடம் 18 பில்லியன் ரூபா சொத்துகள் இருப்பதாகக் கூறுகின்றனர். இலங்கைக்குக் கிடைத்த பணத்தைவிட நாம் எடுத்த பணம்தான் அதிகாமாக இருக்கிறது என்று கூறுகின்றனர். 18 பில்லியன் ரூபா சொத்தைக் காட்டுங்கள். எனக்கும் பார்க்க ஆசையாக உள்ளது. இந்தப் பணம் எத்தியோப்பியா, சுவாஸிலாந்து, உக்ரேன் போன்ற நாடுகளில் இருப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

இந்த நாடுகளில் பணத்தை வைத்திருந்தால், இறுதியில் கடதாசிகளை மட்டும்தான் எடுக்கமுடியும். அமெரிக்கப் பிரதிநிதிகளிடம்கூட இதைத்தான் கூறுகின்றனர். எமக்குள்ள கெளரவத்தை இல்லாது செய்ய முயற்சிக்கின்றனர். புலம்பெயர் தமிழர்களின் பழிலாங்கல் தற்போது வேறு வழியில் நடக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் என்னைச் சிறைப்பிடிக்க முயற்சித்தனர். இவர்களின் தேவைக்கேற்பவே அரசு செயற்படுகின்றது. என்னையும் கைதுசெய்ய முயற்சிக்கின்றனர். நான் எதற்கும் தயாராக இருக்கின்றேன்.

பிரிதமர் ரணில் விக்கிரமசிங்கதான் இந்தக் கைதுகளுக்கான உத்தரவைப் பிறப்பிக்கின்றார். சமுர்த்தி நிதி மோசடி எனக் கூறி பஸில் ராஜபக்­ஷவை கைதுசெய்தனர். அடுத்ததாக சதொச நிதி மோசடி எனக் கூறி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைதுசெய்தனர். வாகன மோசடி எனக் கூறி சஜின் வாஸ் குணவர்தனவை கைதுசெய்தனர். முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் எனது சகோதரருமான கோட்டாபய ராஜபக்­ஷவையும் கைதுசெய்ய முயற்சிக்கின்றனர். அவன்கார்டன் மூலமாக அவர் இராணுவத்தினருக்கு நன்மைதான் செய்தார். ஆனால், அவரைக் கைதுசெய்ய முயற்சிக்கின்றனர்.

தமக்குப் போட்டியாக நினைப்பவர்களை அரச தரப்பினர் கைதுசெய்ய நினைக்கின்றனர். நான் தேர்தலில் தோல்வியடைந்ததும் அமைதியாகத்தான் இருந்தேன். ஆனால், மக்கள்தான் கோரிக்கை விடுத்து என்னை மீண்டும் அழைத்தனர். அதனால், நான் சிறு சிறு சந்திப்புகளை நடத்தினேன். அதைக் கண்டு இவர்கள் அஞ்சிவிட்டனர். நான் எந்தச் சவால்களுக்கு முகம்கொடுக்க தயாராக உள்ளேன்” – என்று கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த.

Related Posts