Ad Widget

எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளுராட்சி தேர்தல்

எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும் என மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை அடுத்த 27 ஆம் திகதி கிடைத்ததும் 28 ஆம் திகதி அதனை வர்த்தமானியில் வெளியிட உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பைஸர் முஸ்தபா இந்த விடயங்களை தெரிவித்தார்.

மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை தாமதமானதால் தேர்தலும் தாமதமானது என்றும் அமைச்சர் கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எவரும் அழித்துவிட முடியாது. கடந்த காலத்தில், கட்சியை நிர்மூலமாக்க முனைந்தவர்கள் அழிவை எதிர்நோக்கினார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஒருமைப்பாட்டின் பயணத்தை மேற்கொள்கின்றன. இதற்கு எதிராக குரல் கொடுப்போரை முற்றாக புறக்கணிக்க வேண்டும்என்றும்கூறினார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த, அவர், என்னால் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் தாமதமடையவில்லை.

கடந்த ஆட்சியாளர்களின் தவறினாலே எல்லை நிர்ணய அறிக்கை 3 வருடங்கள் தாமதமடைந்தது. யாரோ செய்த பாவச் சுமையை எனக்கு சுமக்க வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

4000 எல்லைகளில் 2 ஆயிரம் தொடர்பில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தது. சகல கட்சிகளினதும் வேண்டுகோளுக்கிணங்க எல்லை நிர்ணயம் தொடர்பில் மேற்முறையீடுகள் பெறப்பட்டு அதனை ஆராய குழு அமைத்தோம்.

சுயாதீனமாக செயற்பட்டு வருகிறது. டிசம்பர் 31 வரை அதற்கு காலக்கெடு வழங்கியுள்ளேன். இதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்போவதில்லை. எதிர்வரும் 24 ஆம் திகதி எனக்கு அறிக்கையை கையளிப்பதாக குழு அறிவித்துள்ளது.

மொழிபெயர்ப்பு பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்படுகிறது. நாளை அதை தந்தால் மறுதினமே அதனை வர்த்தமானியில் வெளியிட தயாராக உள்ளேன் என்றும் அமைச்சர் கூறினார்.

Related Posts