எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கு எமக்கு முறையாக அறிவிக்கப்பட்டால், நாம் உண்மையாக செயற்படுவோம். மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மலையகக் கட்சிகள் எமக்கு பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.
அண்மையில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை அழைத்து கலந்துரையாடியமை பற்றி கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
‘எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும், எமது செயற்பாடுகள் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் நேர்மையானதாக இருக்கும்.
கடந்த செவ்வாய்க்கிழமை சபாநாயகர் என்னை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். கட்சித் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் இது அமைந்திருந்தது.
இவ்வேளையில் எதிர்க்கட்சி தலைவர் விவகாரமும் அங்கு பேசப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் சபாநாயகரும் நானும் கலந்துரையாடினோம். எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படுமானால், அது குறித்து ஆச்சரியப்படவோ, அன்றேல் வழங்கப்படாவிட்டால் அது குறித்து கவலைப்படவோ போவதில்லை. எவ்வாறெனினும், நாம் உண்மையாக செயற்படுவோம்’ என்றார்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற விவகாரத்துக்கு எதிர்வரும் 7ஆம் திகதி முடிவு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.