Ad Widget

எதிரிக்கும் துரோகிக்கும் வாக்குரிமை மூலம் செய்தி கூறியுள்ளோம்

தமிழ் மக்களின் துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சரியான செய்தியொன்றை வழங்கியுள்ளனர் என வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தெரிவித்தார்.

mrs-inkaran

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாகரஞ்சினி ஐங்கரன் திங்கட்கிழமை (12) அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்த நாட்டின் தலைமைத்துவத்தை நிர்ணயிக்கும் தேர்தல் கடந்த 8 ஆம் திகதி நடைபெற்று முடிவடைந்துள்ளது.

தமிழ் தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் கோரிக்கைக்கு ஏற்ப வாக்களித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவு செய்துள்ளனர்.

கடந்த கால வரலாறு எமது வழிகாட்டிகள் ஆகும். கடந்த காலங்களில் எமக்கு இடம்பெற்ற அனுபவங்கள் எமக்கு மிகுந்த படிப்பினையை தந்துள்ளது.

இந்த தேர்தல் தொடர்பில் பல்வேறுபட்ட நியாயங்கள் மற்றும் கருத்துக்கள் காணப்பட்டன. எமது இனத்தின் இருப்பை இல்லாமல் செய்வதற்கு எதிர்ப்பை காட்டவேண்டிய நிலையுள்ளதை ஒவ்வொருவரும் உணர்ந்து எமது வாக்குகளை பதிவு செய்ததன் ஊடாக எமது இனத்தினுடைய அபிலாசைகளை வெளிக்கொண்டுவர முடிந்துள்ளது.

தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட பல வகையான பலங்கள் திட்டமிட்ட வகையில் கடந்த காலங்களில் அழிக்கப்பட்டன. எதிரியை தாக்கக்கூடிய மிகக்கூரிய ஆயுதமாக வாக்குரிமை மட்டும் எம்மிடத்தில் காணப்பட்டது.

அந்த வாக்குரிமையை வைத்து, எதிரிக்கும் துரோகிக்கும் பல செய்திகளை நாங்கள் கூறியிருக்கின்றோம் என அந்த செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts