Ad Widget

எச்சரிக்கை; பிரச்சினையை தீர்க்காவிடில் பதவிகளுக்கு ஆபத்து வரும்

மணல் மற்றும் மரம் கடத்தல், களவு ஆகிய விடயங்களில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் அதிக சிரத்தை எடுத்து செயற்பட வேண்டும். எதிர் வரும் 30 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்குகின்றேன்.

இதற்குள் இந்த விடயங்கள் தொடர்பில் சீரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நீங்கள் இங்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளாக இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்றே எண்ணுகின்றேன். தகுதியானவர்கள் பலர் காத்திருக்கின்றனர். குறித்த காலப்பகுதிக்குள் யாழ். மாவட்டத்தில் பிரச்சினைக் குரிய மேற்படி விடயங்களுக்கு தீர்வு காணுங்கள் இவ்வாறு கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைத் தவிசாளர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும், யாழ்.மாவட்டத்தில் பொலிஸார் வினைத்திறனற்று செயற்படுவது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளை முன்வைத்தனர்.

அனுமதிப் பத்திரம் இன்றி களவாக மணல் ஏற்றிச் செல்வதை பொலிஸார் கண்டும் காணாதது போல் இருக்கின்றனர். பனை மரங்கள் தறித்து கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றது. திருட்டுச் சம்பவங்கள் யாழ்.குடாநாட்டில் அதிகரித்து இருக்கின்றது.

இந்த விடயங்களைத் தடுப்பதற்கு பொலிஸார் தமது நடவடிக்கைகளை முழுமையாக எடுக்கவில்லை. ஏதாவது ஒரு காரணங்களைச் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.

யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் சிறுவர் – மகளிர் பொலிஸ் பிரிவு இயங்குவதாக பெயரளவில் மாத்திரமே சொல்லப்படுகின்றது. ஆனால் நடைமுறையில் இல்லை – போன்ற விடயங்கள் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இவற்றையயல்லாம் கேட்டறிந்த வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித், “நீங்கள் எனக்கு ஒத்துழைக்க மாட்டீர்கள் என்று நினைத்தே நான் இங்கு வந்தேன். ஆனால் இவ்வளவு விடயங்களை எனக்குத் தெரிவித்து, ஒத்துழைத்தமைக்கு நன்றிகள். நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் நான் நடவடிக்கை எடுப்பேன்.” என்று குறிப்பிட்டார்.

அதன்பின்னர் கருத்துத் தெரிவித்த அவர் “பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் இங்கு இருக்கின்றனர். அவர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் மேற்சொல்லப்பட்ட இங்கு நடைபெறும் குற்றங்களைத் தீர்க்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு இங்குள்ள பொலிஸாரின் எண்ணிக்கையே போதுமானது. இதனைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கவில்லையாயின், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள்தான் வினைத்திறனற்றவர்கள்.

தகுதியான பலர் உங்கள் பதவிகளுக்கு வருவதற்கு காத்திருக்கின்றார்கள். நீங்கள் செயற்படாவிட்டால், அவர்களை உங்கள் பதவிகளுக்கு நியமிக்க வேண்டி வரும்.

உங்களுக்குச் சொல்லப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய நீங்கள் செயற்பட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், நான் எனது விசேட அணியினரை இறக்கி நடவடிக்கை மேற்கொள்வேன்.” என்று கடுந்தொனியில் தெரிவித்தார்.

“அது உங்களுக்குத்தான் (பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி) பாதிப்பாக அமையும். இங்குள்ள சிறுவர் மகளிர் பொலிஸ் பிரிவுகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்கின்றேன்.

வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பொலிஸார் சிறப்பாக செயற்படுகின்றனர். இங்கு பொலிஸார் சிறப்பாக செயற்படாமைக்கு காரணம், மொழிப் பிரச்சினையாக இருக்கலாம்.

ஆனாலும், எதிர்காலத்தில் அவர்கள் சிறப்பாக செயற்பட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts