Ad Widget

எச்சரிக்கை! காலநிலை மேலும் மோசமடையலாம்

caution-echcharekkaiஇலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்த கடும்மழை சற்று குறைந்து வெள்ளமும் படிப்படியாக வடிந்தோடி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

ஆனால், அடுத்துவரும் சில தினங்களில் நாட்டில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என்பதால் மக்களை அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையத்தின் இயக்குநர் எஸ். ஆர். ஜயசேகர கூறினார்.

ஐரோப்பிய மீடியம் ரேஞ்ச் வானிலை முன்னறிவிப்பு நிலையத்தின் கணிப்பின்படி, இலங்கையிலும் சூழவுள்ள கடலிலும் அடுத்த சில நாட்களில் பலத்த காற்று வீசக்கூடிய சூழ்நிலை நிலவுவதாகவும் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எஸ்.ஆர். ஜயசேகர தெரிவித்தார்.

´வரும் 9-ம் திகதி வரை தான் நாங்கள் இதனை எதிர்வு கூறுகின்றோம். ஆனால் 9-ம் திகதிக்குப் பின்னரும் இந்த நிலைமை நீடிக்கலாம் என்று தான் நம்புகின்றோம். அதனால் கரையோரத்தை அண்டிய மக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும்´ என்றார் வானிலை அவதான நிலையத்தின் இயக்குநர்.

இந்த அவதானிப்புகளின்படி மழை அதிகரிக்க வாய்ப்பில்லை. எனினும் காற்று அதிகரித்தால் மலையகப் பிரதேசங்களில் மழையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஜயசேகர தெரிவித்தார்.

மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் தெற்கில் காலி மாத்தறை மாவட்டங்களிலும் மழை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த சில தினங்களாக பெய்த மழை மற்றும் வெள்ளம், அதன் விளைவாக ஏற்பட்ட மண்சரிவுகளில் ஐந்து மாகாணங்கள் பாதிக்கப்பட்டன.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் ஒருவரை இன்னும் காணவில்லை. சிலர் காயமடைந்துள்ளனர்.

11 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 7 ஆயிரம் பேர் இன்னும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்திலேயே 16 பேர் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

Related Posts