Ad Widget

ஊர்காவற்றுறை நீதிமன்றின் முன்பாக மக்கள் இன்று பெரும் ஆர்ப்பாட்டம்! சுடுவோம் என பொலிஸார் மிரட்டல்!!

ஊர்காவற்றுறை நீதிமன்றின் முன்பாக இன்று வியாழக்கிழமை காலை பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் மக்கள் ஈடுபட்டனர். நீதிமன்றின் முன் ஒன்றுகூடுபவர்களை சுடுவதற்கு உத்தரவு இருக்கிறது எனவே கலைந்து செல்லுங்கள் என பொலிஸார் கூறியதற்கு அமைய அங்கிருந்து சென்றனர்.

புங்குடுதீவில் கூட்டுவன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்ட மாணவி வித்தியாவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கொலைக் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஊர்காவற்றுறையின் நெருஞ்சிமுனையில் காலை 9 மணிக்கு ஆரம்பித்த பேரணி ஊர்காவற்றுறை நீதிமன்றை அடைந்தது. அங்கு நின்று “வித்தியாவின் மரணத்துக்கு நீதி தேவை, கொலைக் குற்றவாளிகளை தூக்கிலிடு” எனக் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து நீதிமன்றின் காவல் கடமையில் இருந்த பொலிஸார் நீதிமன்றின் முன்னர் சத்தம் எழுப்பக்கூடாது என்றும் யாழ். நீதிமன்றம் தாக்கப்பட்டதற்குப் பின்னர் நீதிமன்றின் முன் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தி குழப்புவர்களை சுடுவதற்கு உத்தரவு இருக்கிறது என்றும் எனவே அங்கிருந்து கலைந்து செல்லுமாறும் கூறினர்.

இதையடுத்து அங்கிருந்து ஊர்வலமாக சென்ற மக்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தை சென்றடைந்து பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு மகஜர் ஒன்றைக் கையளித்தனர். பின்னர் அருகிலிருந்த பிரதேச செயலகத்துக்கும் சென்று பிரதேச செயலரிடமும் மனு ஒன்றை கையளித்த பின்னர் கலைந்து சென்றனர்.

Related Posts