2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கின் இறுதித் தீர்ப்பை கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.
நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள்:
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கான தண்டனை விபரங்கள் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய:
5 பிரதிவாதிகளுக்கு தலா 200 ஆண்டுகள்,
5 பிரதிவாதிகளுக்கு தலா 220 ஆண்டுகள்,
4 பிரதிவாதிகளுக்கு தலா 240 ஆண்டுகள், மற்றும்
ஒரு பிரதிவாதிக்கு 260 ஆண்டுகள்
எனக் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை அரசுடைமையாக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடுதலை செய்யப்பட்டவர்கள்:
அதேவேளை, போதிய சாட்சியங்கள் இன்மையால் வழக்கிலிருந்து 9 பேர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், வழக்கின் 17ஆவது சந்தேகநபரான யாசிம் பாவா அப்துல் ரவூப் விசாரணைகளின் போது உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கின் பின்னணி:
மொஹம்மது நௌஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை, தீவிரவாத மற்றும் இனவாத கருத்துகளைப் பரப்பியமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் 8,900 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
269 பேர் உயிரிழந்து 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்த இத்தாக்குதல் வழக்கில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்திருந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி சாட்சி விசாரணைகள் நிறைவடைந்திருந்தன.
பலத்த பாதுகாப்பு:
தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், மோப்ப நாய்கள் மற்றும் நடமாடும் சிசிடிவி வாகனங்கள் அடங்கிய பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்ட 15 பேர்:
மொஹம்மது நௌஃபர் மௌலவி
மொஹமட் சரீப் ஆதம் லெப்பை (கபூர் மாமா)
ஹயாத்து மொஹம்மது அஹமது மில்ஹான்
மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா
மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல் ஹக்
மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான்
மொஹமட் மன்சூர் மொஹமட் சனஸ்தீன்
அப்துல் மனாஃப் மொஹமட் பிர்தௌஸ்
மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித்
அப்துல் லத்தீப் மொஹமட் சாஃபி
ஹுஸைனுல் ரிஸ்வி காலித் சமீர்
மொஹமட் ஹனீபா செய்னுல் ஆப்தீன்
மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹாரிஸ்
ராசிக் ரசா ஹுசைன்
கச்சி மொஹம்மது மொஹம்மது ஜெம்சித்
விடுவிக்கப்பட்ட 9 பேர்:
மொஹமட் சவாஹிர் மொஹமட் ஹசன்
மொஹமட் இஃப்திகார் மொஹமட் இன்சாஃப்
ரஷீட் மொஹமட் இப்ராஹிம்
செய்னுல் ஆப்தீன் மொஹமட் ஜஸீம்
மொஹமட் முஸ்தபா மொஹமட் ரிஸ்வான்
மீரா சாஹிப் மொஹமட் நஃப்லி
மொஹமட் அமீர் மொஹம்மது அயதுல்லா
மொஹமட் அன்சார்தீன் மொஹமட் ஹில்மி (ஹில்மி)
மொஹமட் அக்ரம் அஹ்கம்