Ad Widget

உண்ணாவிரத கைதிகளுக்கு மீண்டும் விளக்கமறியல்!!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் 14 அரசியல் கைதிகளையும் தொடர்ந்து எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை செய்யப்படுவீர்கள் என வடமாகாண ஆளுநா் ரெஜினோல்ட் கூரே, அமைச்சா் டி.எம் சுவாமிநாதன் ஆகியோர் சிறைச்சாலைக்கு நேரில் சென்று உறுதியளித்த நிலையிலும் நீதிமன்றம் இன்று புதன்கிழமை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 14 பேர் இன்று புதன்கிழமை 16ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் நீதிமன்றம் இவ்வாறு பணித்துள்ளதாகவும் அறிமுடிகின்றது

உண்ணாவிரதம் இருந்த நிலையிலும் இவர்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் மயங்கி வீழ்ந்ததாகவும் வழக்கு விசாரணைகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக எவரும் சமுகமளிக்கவில்லை என்றும் குற்றப்புலனாய்வு பொலிஸாா் மாத்திரமே சமுகமளித்தனர்.

நீதிமன்ற தீா்ப்பையடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 அரசியல் கைதிகளையும் மகசீன் சிறைச்சாலைக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவார்கள் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திலும் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் சமுகமளிக்காமை, மற்றும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டமை தொடர்பாக கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் விசனம் தெரிவித்தார்.

அத்துடன் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இன்று புதன்கிழமை சிறந்த தீர்வு கிடைக்கும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உறுதியளித்த நிலையில், ஜனாதிபதியின் தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்திற்கோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கோ எதுவும் தெரியாத நிலை காணப்படுவதாகவும் அருட்தந்தை மேலும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை கைதிகளை விடுதலை செய்வதற்கான பிரேரணை மீதான விவாதத்தின்போது அரசாங்கம் உரிய பதில் வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டிருந்தது என்றும் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதத்தின் முடிவில் அரசாங்கம் பொறுப்பான பதில் வழங்கவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Related Posts