Ad Widget

உணர்வு எழுச்சியுடன் பல்கலைக்கழக சமூகம் முன்னெடுத்த அமைதிப்பேரணி! நீதி வழங்க கோரிக்கை!

10599430_1051888401493183_7927481109758459776_n

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள்  மற்றும்  மனித உரிமை மீறல்கள்  தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடுமாறும் அதற்கு நீதி வழங்குமாறும்  வலியுறுத்தி கவனயீர்ப்புப் பேரணி போராட்டம்  நடைபெற்றது. பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து  ஏற்பாடு செய்துள்ள போராட்டம்  இன்று காலை 10 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகி பலாலி வீதி ஊடாக அரசடி வீதியை அடைந்து அங்கிருந்த   நல்லூர் வடக்கு வீதியை வந்தடைந்தது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் திரு ராசகுமாரனின்  உரையினை தொடர்ந்த   மகஜர் இந்து மத குரு  மற்றும் கிறிஸ்தவ பாதிரியார் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது இம் மகஜர்  கொழும்பில் உள்ள ஐநா வதிவிட காரியாலயத்திற்கு அவர்களால் கையளிக்கப்பட உள்ளது என இராசகுமாரன்  அறிவித்தார். மகஜர் வாசித்தும் காட்டப்பட்டது போராட்டத்தில் சமயத்தலைவர்கள்  மாணவர்கள் பேராசிரியர்கள் ஊழியர்கள்  அரசியல் வாதிகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள்  கலந்து கொண்டனர்.

அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்கவர்களாக சுரேஸ் பிரேமச்சந்திரன் ,அனந்தி , சித்தார்தன் ,சிறீதரன் ,செல்வம் அடைக்கலநாதன் ,மாவை சேனாதிராஜா, சுகிர்தன் , சரவணபவன், கஜதீபன், சிவமோகன், குணசீலன் , பரஞ்சோதி,டெனீஸ்வரன், செ.கஜேந்திரன்,சர்வேஸ்வரன் ஆகியோரை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

போராட்டத்தில் கலந்து கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களை மக்கள் பெரிதாக கவனத்தில் கொண்டிருக்கவில்லை.அவர்கள் சாதாரண மக்களுடன் மக்களாக நின்று விட்டு போனதை அவதானிக்க முடிந்தது. இறுதியில் சில அரசியல் வாதிகள் வெயிலுக்கு ஒதுங்கி மண்கும்பியடியில் நின்றுவிட்டு சென்றனர். பல்கலைச்சமூகமும் மக்களும் தங்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

பேரணியுடன் இணைந்து வந்த காணாமற்போனோரின் உறவினர்கள், நல்லூர் வடக்கு வீதியில் வைத்து பேரணிக்கு முன்பாக வந்து ஓலமிட்டு அழுதனர். கதறியவர்களில் சிலர் மயங்கி வீழ்ந்தனர்.

பெரும்பாலான வடமாகாணை சபை உறுப்பினர்கள் தங்கள் சபை அமர்வுக்காக சென்றுவிட்டிருந்தனர். ஐநா தீர்மானம் தொடர்பில் ஊடகவியலாளர் மாநாடு நடாத்திய சுமந்திரன் மற்றும் மகாணசபை உறுப்பினர் சயந்தன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. சுமந்திரன் மேற்கு வீதியில் வந்து விட்டு சென்றதாக் தெரிவிக்கப்பட்டிருந்தது ஆனால் உறுதி செய்யப்படவிடவில்லை

புலனாய்வாளர்கள் காணப்பட்ட பொழுதிலும்  எந்தவித இராணுவ பிரசன்னமும் காணப்படவில்லை. பொலிசார் போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தனர்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் அடங்கிய விடயங்கள் வருமாறு:    எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் வெளியாகும் என முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த இலங்கை மீதான விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தி அதனை செப்ரெம்பர் மாதத்திற்கு பிற்போட்டமைக்கு நாம் எமது ஆழ்ந்த விசனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் இந்த அறிக்கை திட்டமிட்டபடி வெளிவரவேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசு இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டின் போரின் போது இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் அறிக்கை பிற்போடப்படுவதை தாங்கள் பரிந்துரை செய்துள்ளதாக நாம் புரிந்துகொள்கிறோம்.   அரசின் நடைமுறையிலுள்ள நிர்வாகக் கட்டமைப்பையும் (யுத்தத்திற்குத் தீவிர பங்காற்றியவர்கள் உட்பட) கடந்த கால உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகள் நீதியை நிலைநாட்டத் தவறியமை தொடர்பான வரலாற்றையும் கருத்தில் கொண்டு நோக்கும்போது இந்த அரசாங்கத்தால் உருவாக்கப்படவல்ல எந்தவொரு உள்நாட்டுப் பொறிமுறையிலும் எமக்கு நம்பிக்கை இல்லை என்பது தெளிவு.

இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்ற சிங்கள பௌத்த தலைமைத்துவங்கள் தொடர்பிலான எமது நீண்ட கால அனுபவத்தில் இலங்கை ஆயுதப் படைகளைச் சார்ந்த அங்கத்தவர்கள் எந்தக் குற்றங்களுக்காகவும் உள்நாட்டில் தண்டிக்கப்படமாட்டார்கள் என்பதை நாம் அறிவோம். உள்நாட்டு விசாரணை மீதான சர்வதேச மேற்பார்வை வெறும் கால வீரியத்திற்கு மட்டுமே வழிகோலும் என்பதையும் அறிவோம்.   தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தமை மூலம் மஹிந்தவுக்கு எதிரான தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆட்சி மாற்றத்தின் ஊடாக பாரிய ஒரு மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் நாம் வாக்களிக்கவில்லை.   ஜனாதிபதி சிறிசேன ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஒரு மாத காலப் பகுதி தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்திடம் இருந்து புதிய மாற்றங்கள் எதனையும் எதிர்பார்க்கமுடியாது என்பதை நிரூபித்துவிட்டது.   நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளான இராணுவ மயமாக்கம் மக்கள் தம் சொந்தக் கிராமங்களில் குடியேறல்காணாமல் போனோர் மற்றும் சட்டவிரோத தடுப்புக் காவல் சம்பந்தப்பட்டோர் பிரச்சினைகள் தொடர்பில் சிறிசேன அரசால் குறிப்பிடக்கூடிய எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட 100 நாள் நிகழ்ச்சித் திட்டத்தில் இப்பிரச்சினைகள் உள்ளடக்கப்படவும் இல்லை.     அரசியல் தீர்வுக்கான பேச்சைக் கூட சிறிசேன அரசு மேற்கொள்ளவில்லை. ஆகவே மனித உரிமைகள் ஆணைக்குழுவினர்  இலங்கை மீதான தம் விசாரணையை தகவல் தருவோருக்குப் போதிய பாதுகாப்பு சர்வதேச விசாரணையாளர்களால் மேற்கொள்ள இலங்கை வர அனுமதி கோரி இதன் மூலம் ஒரு முழுமையான – முறையான அறிக்கைத் தயாரிப்பதற்கு உதவும் வகையில் ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கபட்டதையடுத்து சர்வதேச விசாரணைக்கு இட்டுச் செல்லும் வகையில் அவசியமான நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்குமாறு தங்களை வேண்டுகின்றோம். – என்று அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது

 

11001895_782747098440476_7740300544852782443_n 10985298_782747085107144_3957563282306333042_n

 

20150224_11025516180_10206131930043618_1808841125952268604_n 524237_10206131979964866_2695292769594373555_n 10422516_10206131737958816_8116711314696808097_n 10429486_10206131939963866_5276712323429043470_n 10431467_10206131981684909_2496169531541521017_n 10462469_10206131803200447_4423525501764676589_n 10923273_10206131927443553_3813570099840551608_n 10987315_10206131931843663_1170233995345260295_n 10991385_10206131983884964_7785657407332865047_n 10996115_10206131981044893_5475915252215786475_n 11002503_10206131932363676_1936980466257375749_n 11008548_10206131982484929_7434365789358907426_n 11018839_10206131980364876_2059165326578684817_n 11018884_10206131739278849_5746930071229077259_n 11021196_10206131811520655_4327951666102296150_n 11024648_10206131799480354_1642037517384258738_n 11025199_10206131801560406_6471529995899375214_n 11026251_10206131978804837_1919500188535514883_n 20150224_110308 20150224_110322

letter

Related Posts