Ad Widget

இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு ஏன் தடையேற்படுத்துகிறீர்கள்? ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனிடம் உயர் நீதிமன்றம் கேள்வி

“இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு ஏன் தடையை ஏற்படுத்துகிறீர்கள். அவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குவது அவசியம்தானே” என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் உயர் நீதிமன்ற கேள்வி எழுப்பியது.

யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போதே உயர் நீதிமன்ற அமர்வு இந்தக் கேள்வியை எழுப்பியது.

“மேன்முறையீட்டு மனுதாரர் என்னுடன் இல்லை. அவர் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர். அதனால்தான் இந்த வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னெடுக்கின்றோம்” என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உயர் நீதிமன்றுக்கு பதிலுரைத்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெறும் மேன்முறையீட்டு மனுதாரருக்கு எதிரான மனுவின் விசாரணைகளைத் துரிதப்படுத்தி இறுதிக் கட்டளையை வழங்க உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யாது ஒத்திவைத்தது.

யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் பிரியந்த ஜெயவர்த்தன, எல்.டி.பி டெகிதெனிய, முர்டு பெர்னான்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்த்தனவும் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் அமர்வில் முன்னிலையானார்.

“இடைக்காலக் கட்டளையை ஆட்சேபிக்கும் தங்களின் மேன்முறையீட்டு மனு மீதான விவாதம் இடம்பெற்று அதன் மீதான கட்டளையாக்குவதற்கு காலதாமதம் ஏற்படலாம். அதனால் மேன்முறையீட்டு நீதிமன்றின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டு காலம் வீணடிக்கப்படும்.

மேன்முறையீட்டு நீதிமன்றில் தங்களுக்கு எதிரான மனு மீதான இறுதிக் கட்டளை வழங்கப்பட்டு அது தொடர்பில் ஆட்சேபனை எழுந்தால் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து முன்னெடுக்க முடியாதா? என்று உயர் நீதிமன்ற அமர்வு மேன்முறையீட்டாளரின் கேள்வி எழுப்பியது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வரும் 23ஆம் திகதி விவாதம் இடம்பெறுவதற்கு திகதியிடப்பட்டுள்ளது. அதனால் அதன் மீதான இறுதிக் கட்டளை வழங்கப்படும்வரை மேன்முறையீட்டு மனுவை நிறுத்திவைக்க இணக்கம் என மனுதாரர் சார்பில் மன்றுரைக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாரருக்கு எதிரான மனு மீது வரும் 23ஆம் திகதியுடன் விவாதத்தை நிறைவு செய்து துரிதமாக இறுதிக் கட்டளையை வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் மேன்முறையீட்டு மனுவை வரும் மார்ச் 5ஆம் வரை ஒத்திவைத்தது.

பின்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க கட்டளையிடுமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப் பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர சபை எல்லையில் வதியும் வாக்காளர் ஒருவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டமை உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயல் என மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி கட்டளையிடவேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.

மனு தாரர் கோரிய இடைக்கால நிவாரணங்களில் ஒன்றான, மனு மீதான விசாரணை நிறைவடைந்து கட்டளையிடும்வரை யாழ்ப்பாண மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்க உறுப்பினர் வி.மணிவண்ணனுக்கு தடை உத்தரவை வழங்கவேண்டும் என்பதை ஏற்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஓகஸ்ட்டில் இடைக்காலக் கட்டளை வழங்கியது.

மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்தே மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் சார்பில் மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது.

Related Posts