Ad Widget

இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது – மாவை

இலங்கைத் தமிழ் மீனவர்களை பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மீனவர்கள் இந்திய இழுவைப்படகுகளால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது, முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்களுக்கு இந்தியாவிலிருந்து பொறுப்புவாய்ந்த அதிகாரி ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

இதன்போது குறித்த அதிகாரி, ரவிகரனுடன் பேசும்போது, “கடந்த வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் சமரசம் மற்றும் மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களை ஊடகங்களில் பார்வையிட்டேன். இலங்கை மீனவர்களின் கோரிக்கை நியாயமானது. அதனைத் நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

அத்துடன் இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கையினைக் கட்டுப்படுத்துவதற்குரிய செயற்பாடுகளை நாம் முன்னெடுத்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா குறித்த அதிகாரியுடன் உரையாற்றும்போதே, இலங்கை மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தினைக் கட்டி எழுப்பும் விடயங்களில் இந்திாவிற்குப் பொறுப்பிருப்பதாக வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்துள்ளதாவது, “வரலாறு முழுவதும் போர்க்காலத்திலும், இயற்கை அனர்த்தத்திலும், குறிப்பாக சுனாமி அனர்த்தக் காலத்திலும் கரையோர பிரதேசங்களில் இடம்பெறும் அனைத்துப் பாதிப்புக்களுக்கும் மீனவர் சமூகமே முகங்கொடுத்து வருகின்றது.

ஆகவே, இவர்களை பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை கட்டி எழுப்புகின்ற பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது.

இதனால் இவ்விடயம் தொடர்பாக இந்திய அரசுக்கு நீங்கள் சிபாரிசு செய்யவேண்டும்” என குறித்த அதிகாரியிடம், அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts