Ad Widget

இலங்கை தோல்வி : விடை பெற்றார் சங்கா

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 278 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது.

Kumar Sangakkara

இதில் முன்னதாக இடம்பெற்ற முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கடந்த 20ம் திகதி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அந்த அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய முரளி விஜய் ஒட்டம் எதனையும் பெறாது வௌியேறி ஏமாற்றமளித்தார்.

எனினும் அதிரடியாக ஆடிய மற்றுமொரு ஆரம்ப வீரர் லோகேஷ் ராகுல் 108 ஓட்டங்களை விளாசினார்.

மேலும் விராட் கோலி (78), ரோஹித் சர்மா (79) ஆகியோரும் சிறப்பாக ஆட இந்திய அணி 393 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை, சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து, முதல் இன்னிங்சை நிறைவு செய்தது.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன ஒற்றை ஓட்டத்துடன் வௌியேற, குஷல் சில்வா நிலைத்து ஆடி 51 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

அத்துடன் அணித் தலைவர் மெத்தியூஸ் சிறப்பாக ஆடி 102 ஓட்டங்களையும் லகிரு திரிமானே 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க இலங்கை 306 ஓட்டங்களைப் பெற்ற போது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

பின்னர் 87 ஓட்டங்களால் முன்னலையில் இருந்த இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது.

சிறப்பாக ஆடிய அந்த அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை 2வது இன்னிங்சை இடைநிறுத்தி, இலங்கைக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பை வழங்கியது.

அந்த அணி சார்பில் ரெஹானே ​126 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இதன்படி 413 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இன்றைய ஐந்தாம் நாளில் அடுத்ததடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்து 278 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.

இரண்டாவது இன்னிங்சில் 43.4 ஓவர்கள் மட்டுமே நின்றுபிடித்த இலங்கை அணி 134 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதேவேளை இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார கலந்து கொள்ளும் இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்டில் சங்கக்கார முதல் இன்னிங்சில் 32 ஓட்டங்களையும் 2வது இன்னிங்சில் 18 ஓட்டங்களையும் மட்டுமே பெற்றார்.

Related Posts