Ad Widget

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்!

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

sampanthan

தேசிய நிறைவேற்றுச் சபையின் நேற்றைய கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய கூட்டம் தொடர்பில் அதில் கலந்துகொண்ட சம்பந்தன் எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில் –

“ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் இன்று (நேற்று) நடைபெற்ற தேசிய நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய மூன்று பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்வதால் வடக்கு மீனவர்கள் உயிர்ச்சேதம், சொத்துச்சேதம் எனப் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள் எனவும், எனவே, இதற்கு உடன் தீர்வு காணப்படவேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு உடன் தீர்வு காண்பதில் அரசு உறுதியாகவுள்ளது எனவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்விடயம் குறித்து தனக்கும் அவருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளை, எதிர்வரும் 31ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண விசேட கூட்டம் நடைபெறவுள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் மீன்பிடித்துறை அமைச்சர், வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண மீன்பிடி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன. இன்று (நேற்று) நடைபெற்ற கூட்டத்தில் சுன்னாகம் பகுதியில் குடிதண்ணீர் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமையால் அங்குள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இது குறித்து அரசு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், கழிவு எண்ணெய் கலப்பு தொடர்பாக அரசால் ஆராயப்பட்டு அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடரும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இன்றைய (நேற்று) கூட்டத்தில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக கூடிய கவனம் எடுத்துக்கொண்ட ஜனாதிபதி, அதனைத் தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கையை உடன் எடுப்பதாகவும் உறுதியளித்தார் – என்றார்.

Related Posts