Ad Widget

இலங்கையை தோற்கடித்தது 2–வது வெற்றியை பெற்றது மேற்கிந்தியத்தீவுகள்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும், நடப்பு சாம்பியன் இலங்கையும் (குரூப்1) பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் முதலில் இலங்கையை பேட் செய்ய அறிவுறுத்தியது. இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி, வெஸ்ட் இண்டீசின் சுழலுக்கு தடுமாறியது. பெரிய அளவில் அதிரடி காட்ட முடியாமல் தவித்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 122 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

அதிகபட்சமாக திசரா பெரேரா 40 ரன்களும், கேப்டன் மேத்யூஸ் 20 ரன்களும் எடுத்தனர். தில்ஷனுக்கு (12 ரன்) கொடுத்த தவறான எல்.பி.டபிள்யூ. இலங்கைக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் பத்ரீ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் சுலிமான் பென் விக்கெட் எடுக்காவிட்டாலும் 4 ஓவரில் 13 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார்.

அடுத்து 123 ரன்கள் இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. வழக்கமான தொடக்க ஆட்டக்காரர் சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் இறங்கவில்லை. லேசான தசைப்பிடிப்பால் அவர் அவதிப்பட்டதால் அணி நிர்வாகம் ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பவில்லை.

ஆந்த்ரே பிளட்சரும், ஜான்சன் சார்லசும் தொடக்க வீரர்களாக களம் புகுந்தனர். சார்லஸ் 10 ரன்னில் அவுட் ஆனாலும், பிளட்சர் வாணவேடிக்கை காட்டினார். கெய்ல் இல்லாத குறையை போக்கும் வகையில் ஆடிய பிளட்சர் கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிளட்சர் 84 ரன்களுடனும் (64 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்), ரஸ்செல் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

வெஸ்ட் இண்டீசுக்கு இது 2–வது வெற்றியாகும். ஏற்கனவே இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. இதன் மூலம் தனது அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொண்டுள்ளது.

2–வது ஆட்டத்தில் ஆடிய இலங்கைக்கு இது முதலாவது தோல்வியாகும்.

Related Posts