இலங்கையில் முதியோர் எண்ணிக்கை 3.9 மில்லியனை கடந்தது

2024ஆம் ஆண்டு குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பிற்கு அமைய இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை 3,921,124 ஆக அதிகரித்துள்ளது.

இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதமாகும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

இந்த முதியோர் மக்கள் தொகையில் 1,712,535 பேர் ஆண்கள் எனவும், 2,208,589 பேர் பெண்கள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய, முதியோர் மக்கள் தொகையில் 43.67 சதவீதமானோர் ஆண்களாகவும், 56.33 சதவீதமானோர் பெண்களாகவும் உள்ளனர்.

2000 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, முதியோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ், 2002ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தேசிய முதியோர் செயலகமும் தேசிய சபையும் நிறுவப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், அவர்களின் நலனை உறுதிப்படுத்துதல் மற்றும் தேவையான சேவைகளை வழங்குதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த நிறுவனங்கள் செயற்படுகின்றன.

முதியோர் பராமரிப்பு நிலையங்களைப் பதிவு செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல், முதியோர் பகல்நேர பராமரிப்பு நிலையங்களுக்கு உதவிகளை வழங்குதல், அத்துடன் முதியோர் குழுக்களை வலுவூட்டுதல் ஆகியன அவற்றின் முக்கிய பணிகளாகும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

2025ஆம் ஆண்டில் 44,899 முதியோர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 2026ஆம் ஆண்டில் 45,000 அடையாள அட்டைகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், 2026ஆம் ஆண்டில் 25 முதியோர் இல்லங்களில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும், அவற்றுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதற்கும் 500 பயனாளிகளுக்கு உதவிகளை வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts