Ad Widget

இலங்கையின் நல்லிணக்கத்துக்குப் புலம்பெயர் தமிழரின் ஒத்துழைப்பைப் பெறவே லண்டனில் பேச்சு!

“புலிகள் மீதான தடையை நீக்குதல், அரசியல் தீர்வு, உள்ளகப் பொறிமுறை முதலான விடயங்கள் குறித்து லண்டனில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு நடத்தவில்லை” – என்று நேற்று சபையில் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குப் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெறுவது குறித்தே பேசப்பட்டது என்றும் தெரிவித்தார்.

மஹிந்த அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமையவே புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது எனத் தெரிவித்த அவர், இந்த விடயத்தில் மஹிந்த அரசின் வெளிவிவகார அமைச்சால் செய்யமுடியாததை நாம் செய்து முடித்துள்ளோம் என்று பெருமிதம் கொண்டார்.

லண்டனில் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் நடத்திய பேச்சு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை எழுப்பிய கேள்விக்கு நேற்று வெள்ளிக்கிழமை பதிலளித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வால் 2010 மே மாதம் 15ஆம் திகதி நல்லிணக்க ஆணைக்குழு நிறுவப்பட்டது. இந்த ஆணைக்குழு 2011 நவம்பர் 15ஆம் திகதி தமது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது. டிசம்பர் 16ஆம் திகதி அந்த அறிக்கை இந்தச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளில் புலம்பெயர் சமூகத்தினரையும் இணைத்து அரசின் ஒத்துழைப்பைப் பெற்று இந்த நடவடிக்கையை அர்த்தமுள்ளதாக்கவேண்டும் என்று நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் பிரதியை நான் சபையில் சமர்ப்பிக்கின்றேன். புலம்பெயர் சமூகத்தின் உதவியைப் பெற்றுக்கொண்டு இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்று ஆணைக்குழு பரிந்துரையில் குறிப்பட்டுள்ளபோதும், அதை செயற்படுத்துவதற்கு கடந்த ஆட்சியிலிருந்த வெளிவிவகார அமைச்சால் முடியாமல் போய்விட்டது.

வெளிநாட்டுப் பிரஜைகளின் ஆலோசனைகளை அரசு கேட்கவில்லை. இதனால் ஏனைய நாடுகளிலிருந்து இலங்கை தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், மஹிந்த அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளுக்கமைய மேற்படி விடயத்தைச் செய்து முடிக்க எம்மால் முடிந்துள்ளது. வெளிவிவகார அமைச்சு என்ற வகையில் நாம் எமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றி வருகின்றோம். இதற்கமைய லண்டனில் உலகத் தமிழர் பேரவையுடன் பேச்சு நடத்தப்பட்டது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், உலகத் தமிழர் பேரவை அமைப்பின் உறுப்பினர் சுரேன் சுரேந்திரன், தேசிய நல்லிணக்க ஆணைக்குழு உறுப்பினர் ஜெயசிங்க, தென்னாபிரிக்க அரச பிரதிநிதி இப்ராஹிம் இப்ராஹிம் – இவர்தான் ஐ.தே.க. அரசு காலத்தில் புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்தவர்.

சுவிட்ஸர்லாந்து பிரதிநிதி டோனி ஹட்ஸன், நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். இதன்போது எரிக் சொல்ஹெய்ம் முதல் நாளில் 2 மணித்தியாலங்கள் மட்டுமே இந்தப் பேச்சில் கலந்துகொண்டார். புலம்பெயர்ந்தோர்களுடனான அனுபவங்களைத்தான் அவர் இதன்போது பகிர்ந்துகொண்டார். இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கையில் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெறுவது குறித்தே இங்கு பேசப்பட்து. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுத. புலித் தடைநீக்கம் குறித்தோ, அரசியல் தீர்வு குறித்தோ, உள்ளகப் பொறிமுறை குறித்தோ இங்கு பேசப்படவில்லை” – என்றார்.

Related Posts