Ad Widget

இலங்கையர் ஒற்றுமையாக வாழ சமஷ்டியே பொருத்தம்! நோர்வே துணை வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்து!

“இலங்கையில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டுமெனில் சமஷ்டியே பொருத்தமானது” என்று நோர்வே தூதுக்குழுவினரிடம் தமது நிலைப்பாட்டை முன்வைத்திருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

morwat mini meet cm55d

உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு நேற்றுமுன்தினம் கொழும்பு வந்த நோர்வே துணை வெளிவிவகார அமைச்சர் டொரே ஹற்ரெம் தலைமையிலான குழுவினர் நேற்று புதன்கிழமை வடக்குக்குச் சென்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

முன்னர் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பைத் தொடர்ந்து முதலமைச்சர் அலுவலகத்துக்குச் சென்ற நோர்வே துணை வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் முதலமைச்சரைச் சந்தித்து நல்லிணக்கம் தொடர்பில் அவரின் கருத்துகளையும் தற்போதைய சூழலில் தம்மால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.

இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தவை வருமாறு:-

“சிங்கள மக்கள் மத்தியில் சமஷ்டி பற்றி ஒரு தவறான அபிப்பிராயம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அது பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் என்றவாறு சிங்கள மக்கள் மத்தியில் ஒரு தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. அது தவறென்ற அபிப்பிராயம் சிங்கள மக்களுக்கு விளக்கப்படுத்தப்படவேண்டும்.

நாட்டிலுள்ள மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டுமெனில் சமஷ்டி முறையே பொருத்தமானது. இதை சிங்கள மக்களுக்கு உணர்த்தவேண்டிய பொறுப்பு சிங்களத் தலைவர்களிடமே உள்ளது. அதனை சிங்களம் தெரிந்த தமிழ் அரசியல் தலைவர்களும் ஏற்படுத்தவேண்டும்.

நாங்கள் ஒரு தீர்வை அடையாளப்படுத்திக்கொண்டு அதனை மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படும்போது அதற்கு எதிராக சிங்கள மக்கள் வாக்களிக்கும் சூழல் ஏற்படும். இதனை இல்லாதொழிக்க எல்லோரும் ஒன்றிணைந்து இப்போதே நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்.

இதேவேளை, நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் கொழும்பிலிருந்தே எடுக்கப்படுகின்றன. எம்முடன் கலந்தாலோசித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நல்லிணக்கத்துக்குரிய விடயங்களை பாதிக்கப்பட்டவர்களையும், பாதிப்புக்கு உள்ளாகியவர்களையும் ஒரே மேசையில் வைத்து எடுக்கப்படும்போது பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகள் வேண்டுதல்களை அடிப்படையாக வைத்தே நல்லிணக்கம் கொண்டுவரப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் கொழும்பில் இருந்துகொண்டு நல்லிணக்கத்துக்காக நாங்கள் அதை செய்கிறோம், இதைச் செய்கிறோம் எனக் கூறிக்கொண்டு இருந்தால் நல்லிணக்கம் என்பது ஒருபோதும் சாத்தியப்படாது.

மயிலிட்டியை விடுவிப்பதில் இராணுவம் கடும் எதிர்ப்பு என்ற செய்தி பத்திரிகையில் வெளிவந்துள்ளது. காலாதிகாலமாக வாழ்வாதாரங்களை இழந்த மயிலிட்டி மக்கள் அதன் விடுவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கையில் மயிலிட்டியை விடுவிக்காமல் இருப்பது அநியாயமான செயலாகவே பார்க்கப்படுகின்றது.

முன்னரெல்லாம் தெற்கில் மிரிச, வடக்கில் மயிலிட்டி ஆகிய இரண்டு துறைமுகங்களே மீன்பிடித்துறையில் பெரும் செல்வாக்குச் செலுத்திவந்தன. குறிப்பாக, மயிலிட்டியானது நாட்டிலுள்ள மீன் தேவைகளில் மூன்றிலொன்றை நிறைவுசெய்து வந்தது. அத்தகைய மயிலிட்டியை மூடிவைத்திருப்பதென்பது அநியாயமான செயலாகும். இதற்குரிய காரணமாக முன்னர் புலிகள் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்த மயிலிட்டியைப் பயன்படுத்தி வந்தனர் எனக் கூறப்பட்டுள்ளது.

போர் முடிந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டபோது இந்தக் காரணங்களைக் கூறிக்கொண்டிருப்பது பிழையான செயல். இவ்வாறான பல விடயங்களில் நொண்டிக் காரணங்களைக் கூறிக்கொண்டு எமக்கான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது நல்லிணத்திலேயே பாதிப்பை ஏற்படுத்தும்” – என்றார்.

இதனைக் கேட்டறிந்த நோர்வே துணை வெளிவிவகார அமைச்சர், குறித்த விடயங்கள் தொடர்பில் சிங்களத் தலைவர்களுடன் பேசுவதாகவும் உறுதியளித்தார்.

Related Posts