Ad Widget

இலங்கைக்கு வெளியிலேயே விசாரணை – த.தே.கூ

tnaஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கைக்கு வெளியிலேயே சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அதனால், இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை நியாயமான விசாரணையாக இடம்பெறுமென்று நம்புகின்றோம்’ என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்தது.

இதேவேளை, வலி.வடக்குப் பகுதிகளில் காணிகளைச் சுவீகரிப்பு செய்யும் விடயம் அரசுக்கு திண்டாட்டமாக இருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, ‘வலி., வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் நடைபெறாதென யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ள நிலையில், இது குறித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கை என்ன?’ என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சுமந்திரன் எம்.பி, ‘வடக்கில் காணி சுவீகரிப்பு நிறைவடையவில்லை. காணி சுவீகரிப்பு சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் இந்த சுவீகரிப்பு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காணி சுவீகரிப்பினை எதிர்த்து 2,176பேர் கையொப்பமிட்ட அறிக்கையுடன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

இது நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டிய விடயம் என அரசாங்கத்திற்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது. அரசு தனது ஆட்சேபனைக்கான திகதிகளை எடுத்துக்கொண்டிருக்கின்றது. இது அரசாங்கத்திற்கு பெரிய திண்டாட்டமான விடயம். காணி சுவீகரிப்புச் சட்டத்திற்கு முரணாக நடக்கமுடியாது’ என்று சுட்டிக்காட்டினார்.

‘காணி சுவீகரிப்பு என்றால், காணி உரிமையாளருக்கு அறிவித்தல் கொடுக்கப்பட வேண்டும். அக்காணி எந்தப் பொதுத்தேவைக்காக சுவீகரிக்கப்படுகின்றது என்ற காரணம் தனித்தனியாகக் காணி உரிமையாளர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

காணி சுவீகரிப்பு தொடர்பிலான அறிவித்தலினை ஒரு மரத்தில் ஒட்டிவிட்டு 6,386 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க முடியாது. இது ஒரு விசித்திரமான விடயம். காணி சுவீகரிப்பது தொடர்பில் காணி சுவீகரிப்பு சட்டத்தின் பிரிவு 2 மற்றும் பிரிவு 4இன் கீழ் அறிவித்தல்கள் கொடுக்கப்பட வேண்டும். நாங்கள் இதுவிடயமாக நீதிமன்றத்தை நாடியுள்ளோம். முடிவு வரும்போது தெரியும்’ என அவர் கூறினார்.

இந்தியாவை புறந்தள்ள முடியாது

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? த.தே.கூ, இந்தியாவைப் புறந்தள்ளி விடுமா?’ என ஊடகவியலாளர்கள் எழுப்பி கேள்விக்கு பதிலளித்த சுமந்திரன் எம்.பி,

‘இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை இடம்பெற்று உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படும் போது நிலமைகள் மாற்றமடையும். இந்தியா சொல்வதை எல்லாம் நாம் செய்யப்போவதில்லை. எமது கொள்கைகளின் அடிப்படையில் தான் தீர்வு வரும். ஆனால் அது இந்தியாவை புறந்தள்ளி நடக்காது’ என்றார்.

‘இந்தியாவை நாங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் ஒரு தீர்மானத்தினை வைத்துள்ளது. அதாவது, ஒரு நாட்டினை குறிவைத்து தாக்கும் எந்த விடயத்திற்கும் ஆதரவு தெரிவிக்காமை என்பதாகும். சிரியா மற்றும் வடகொரியாவின் பிரச்சினைக்கும் ஆதரவு வழங்கவில்லை.

இலங்கை்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட கடந்த இரண்டு தீர்மானங்களும் சாதாரண தீர்மானங்கள். ஆனால், இந்தமுறை தீர்மானத்தில் சர்வதேச விசாரணை வலியுறுத்தப்பட்டுள்ளது’ என்றும் அவர் கூறினார்.

‘எந்தவொரு நாடும் சர்வதேச விசாரணையென்றால் பலமுறை யோசிக்கும். மனித உரிமைகளை மீறாத நாடு எதுவுமில்லை. எல்லா நாட்டிலும் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. அதனால் ஏனைய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தங்களது நாட்டுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்று தயக்கம் காட்டுவார்கள்.

அந்த வகையில், அடிப்படை உரிமைகளை மீறி எந்த நாடு செயற்படுகின்றதோ அந்த நாடு சர்வதேச விசாரணையினை எதிர்நோக்க வேண்டும். அந்த அடிப்படையில், இந்தியா தயக்கம் காட்டக்கூடும். இடதுசாரிகளான ஜப்பான் மற்றும் கியூபா போன்ற நாடுகளையும் எமது பக்கம் இணைப்பதற்கான முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும்’ என்றார்.

இலங்கைக்கு வெளியிலேயே சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில், இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை நியாயமான விசாரணையாக இடம்;பெறுமென்று நம்புகின்றோம்.

உண்மைகள் வெளிக்கொணரும் போது நிலைமைகள் மாற்றமடையும். ஆகையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த படிமுறைகளை தற்போதே கூறுவது கடினமானது’ என்று அவர் மேலும் தெரிவித்தார்

Related Posts